Published : 22 Jan 2020 07:03 AM
Last Updated : 22 Jan 2020 07:03 AM

லஞ்ச வழக்கில் சிக்கிய சீனாவின் முன்னாள் இன்டர்போல் தலைவருக்கு 13 ஆண்டு சிறை

பெய்ஜிங்

சீனாவின் முன்னாள் இன்டர் போல் தலைவருக்கு லஞ்ச வழக்கில் 13 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப் பட்டுள்ளது.

சீனாவில் பொதுப் பாதுகாப்பு துறை துணை அமைச்சர் மற்றும் கடலோர காவல்படை தலைவராக பணியாற்றி வந்தவர் மெங் ஹாங்வி. இவர் கடந்த 2016 முதல் 2018 வரை இன்டர்போல் தலைவராக பணியாற்றினார்.

இன்டர்போல் தலைமையம் அமைந்துள்ள பிரான்ஸ் நாட்டின் லியோன் நகரில் இருந்து கடந்த2018-ல் இவர் சீனா சென்றபோது அங்கு அவர் காணாமல்போனார். பிறகு அவர் லஞ்ச வழக்கில் விசாரணையில் இருப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறை அறிவித்தது. மெங்அமைச்சராக பதவி வகித்த காலத்தில் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார்.

இந்நிலையில் சில நிறுவனங்கள் மற்றும் நபர்கள் சட்டவிரோத பலனடைய உதவியதாகவும் இதற்கு 21 லட்சம் டாலர் லஞ்சம் பெற்றதாகவும் மெங் கடந்த ஜூன் மாதம் ஒப்புக்கொண்டார்.

இந்நிலையில் அவருக்கு பதிமூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனையும் 2,90,000 டாலர் அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் நேற்று தீர்ப்பு கூறியது.

மெங் ஹாங்வி தனது குற்றங்களை ஒப்புக்கொண்டதாகவும் அவர் மேல்முறையீடு செய்ய விரும்பவில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மெங் ஹாங்வியின் மனைவிக்கு பிரான்ஸ் கடந்த ஆண்டு அரசியல் அடைக்கலம் அளித்தது. சீனா திரும்பினால் தானும் தனது 2 குழந்தைகளும் கடத்தல் முயற்சிக்கு இலக்காகலாம் என அவர் அச்சம் தெரிவித்ததை அடுத்து அரசியல் அடைக்கலம் அளிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x