Last Updated : 19 Jan, 2020 04:47 PM

 

Published : 19 Jan 2020 04:47 PM
Last Updated : 19 Jan 2020 04:47 PM

தேவையில்லாத ஒன்றுதான்; என்ஆர்சி, சிஏஏ இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்: வங்கதேச பிரதமர் கருத்து

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா : கோப்புப்படம்

துபாய்

குடியுரிமைத் திருத்தச்சட்டம், என்ஆர்சி ஆகியவை இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்கள் என்ற போதிலும் இந்த சட்டங்கள் தேவையில்லாத ஒன்று என வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா கருத்து தெரிவித்துள்ளார்

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாகும் சிறுபான்மை மக்களுக்குக் குடியுரிமை வழங்கக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. இந்த சட்டத்தின்படி இந்த மூன்று நாடுகளில் இருந்து முஸ்லிம் அல்லாதவர்கள் இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், ஜைனர்கள், பார்ஸிக்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோர் கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்குள் இந்தியாவுக்கு அகதிகளாக வந்திருந்தால் அவர்களுக்குக் குடியுரிமை வழங்கப்படும்.

ஆனால் இந்த சட்டத்துக்கு எதிராக பல்வேறு மாநிலங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன, போராட்டங்களும் நடந்து வருகின்றன.

சமீபத்தில் வங்கதேசத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஏ.கே.அப்துல் மோமன் அளித்த பேட்டியில் கூறியதாவது:

" குடியுரிமைத் திருத்தச்சட்டம், என்ஆர்சி ஆகியவை இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்கள் ஆனால் அதேசமயம், அந்நாட்டில் நிலவும் நிலையற்ற சூழல் அண்டை நாடுகளையும் பாதிக்கும்" எனத் தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில் வங்கதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசினா, ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகரில் தி கல்ஃப் நியூஸ் நாளேட்டுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் சிஏஏ, என்ஆர்சி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதிலில் " எதற்காக இந்திய அரசு இந்த சட்டங்களைக் கொண்டு வந்தார்கள் என எங்களுக்குப் புரியவில்லை. இப்போதைக்கு இந்த சட்டங்கள் தேவையில்லாத ஒன்று.

இந்தியா கொண்டு வந்துள்ள இந்த சட்டத்தால் அங்கிருந்து எந்த வங்கதேசத்தினரும் மீண்டும் திரும்பி வந்ததாக எந்த கணக்கீடும் இல்லை. ஆனால் இந்தியாவுக்குள் மக்கள் பல பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறார்கள். ஆனால், இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்.

குடியுரிமைத் திருத்தச்சட்டம், என்ஆர்சி ஆகியவை இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்பதில் வங்கதேசம் கவனமாக இருக்கிறது. இந்திய அரசும் இந்த இரு சட்டங்கள் தொடர்பாக இது உள்நாட்டு விவகாரம் எனத் தெரிவித்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் புதுடெல்லிக்கு நான் வந்திருந்தபோது பிரதமர் மோடியும் இதே கருத்தைத்தான் என்னிடம் தெரிவித்திருந்தார். இந்தியாவுக்கும், வங்கதேசத்துக்கும் இடையிலான உறவு தற்போது சிறப்பாக இருந்து வருகிறது. பல்வேறு துறைகளில் கூட்டுறவு வலுவாக இருக்கிறது"

இவ்வாறு ஷேக் ஹசினா தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x