Published : 09 Jan 2020 06:39 AM
Last Updated : 09 Jan 2020 06:39 AM

100 ஒளி ஆண்டு தொலைவில் பூமி அளவுக்கு பெரிய கிரகம்: நாசா செயற்கைக்கோள் கண்டுபிடிப்பு

நியூயார்க்

நூறு ஒளி ஆண்டு தொலைவில் பூமி அளவுக்கு பெரிய கிரகம் பிர பஞ்சத்தில் இருப்பதை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவமான நாசா செயற்கைக்கோள் கண்டு பிடித்துள்ளது.

ஹவாயின் ஹோனாலூலு தீவில் நடைபெற்ற அமெரிக்க வானியல் சொசைட்டியின் ஆண்டு பொதுக் கூட்டத்தில் நாசாவின் ஜெட் புரொபல்ஷன் ஆய்வகம் இதை அறிவித்துள்ளது,

நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அனுப்பியுள்ள டெஸ் (TESS) என்ற செயற்கைக் கோளானது பிரபஞ்சத்தில் காணப்படும் புதிய கிரகங்கள், நிலவுகளை கண்டுபிடித்து ஆய்வு நடத்தி வருகிறது.

இந்நிலையில் பூமியிலிருந்து 100 ஒளி ஆண்டு தொலைவில் (ஒரு ஒளி ஆண்டு என்பது ஒளி யானது ஓராண்டில் பயணப்படும் தூரமாகும்) உள்ள பூமி அளவுக்கு பெரிய கிரகத்தைக் கண்டறிந் துள்ளது.

இதற்கு டிஓஐ 700 டி (TOI 700 d) என்று பெயரிடப்பட்டுள்ளது. நமது சூரிய குடும்பத்திலுள்ள சூரியனினில் 40 சதவீத அளவுக்கு அந்த உலகம் உள்ளதாகத் தெரியவந்துள்ளது. மேலும் சூரியனின் வெப்பத்தைப் போல பாதியளவு வெப்பத்தையும் இது பெற்றுள்ளது. மேலும் அதில் தண்ணீர் இருப்பதற்கான அறிகுறிகளும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து நாசா வான் இயற்பியல் பிரிவு இயக்குநர் பால் ஹெர்ட்ஸ் கூறும்போது, “டெஸ் செயற்கைக்கோளானது நமது நட்சத்திரக் குடும்பங்களுக்கு அருகிலுள்ள பூமி அளவுக்கு பெரிய கிரகங்கள் குறித்து கண்டுபிடிப்பதற்காக விண்ணில் செலுத்தப்பட்டதாகும்.

அந்த பூமி அளவுக்கு பெரிய கிரகத்தை டெஸ் செயற்கைக் கோள் கண்டறிந்தபோது அதை பார்த்து நாங்கள் வியந்தோம். ஆனால் கிரகத்தின் அளவை சரியாகக் கணக்கிட முடியவில்லை. இது கிட்டத்தட்ட பூமியின் அளவுக்கு பெரிய கிரகம் என்பதை பின்னர் கண்டறிந்தோம். இதற்கு அறிவியல் ஆய்வு மாணவர் ஆல்டன் ஸ்பென்ஸர், சிகாகோ பல்கலைக்கழக மாணவி எமிலி கில்பர்ட் ஆகியோர் உதவி செய்தனர். இவர்கள் இருவரும் டெஸ் செயற்கைக்கோள் குழுவில் உள்ளனர்.

இந்த கிரகம் குறித்த செய்தியை பின்னர் ஸ்பிட்சர் விண்வெளி தொலைநோக்கியும் உறுதி செய்தது.

கெப்ளர் விண்வெளி தொலை நோக்கி மூலம் இதேபோன்ற கிரகங்கள் ஏற்கெனவே கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் டெஸ் செயற்கைக்கோள் மூலம் முதன்முதலாக இது கண்டறியப் பட்டுள்ளது.

இது பூமியை விட 20 சதவீதம் பெரிதாக உள்ளது. மேலும் அதன் நட்சத்திரக்கூட்டத்தை 37 நாட்களில் சுற்றி வருகிறது.

தற்போது டிஓஐ 700 டி கிரகத்தைப் போன்ற மாதிரிகளை உருவாக்கி அதை உலகுக்கு அறிவிக்க அறிவியலாளர்கள் முயற்சி செய்து வருகின்றனர்” என்றார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x