Last Updated : 08 Jan, 2020 12:14 PM

2  

Published : 08 Jan 2020 12:14 PM
Last Updated : 08 Jan 2020 12:14 PM

ஏவுகணைத் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் 80 பேர் பலி: ஹெலிகாப்டர்கள், தளவாடங்கள் பலத்த சேதம் ஈரான் அரசு அறிவிப்பு

பிரதிநிதித்துவப்படம்

தெஹ்ரான்

ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்கள் மீது ஈரான் ராணுவம் இன்று அதிகாலை நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 80 அமெரிக்க ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக ஈரான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

ஈரான் படையின் தளபதி காசிம் சுலைமானைக் கடந்த 3-ம் தேதி பாக்தாத் விமான நிலையத்தில் அமெரிக்க ராணுவம் ஆள்இல்லா விமானம் மூலம் ஏவுகணை வீசிக் கொன்றது. இந்த தாக்குதலில் காசிம் சுலைமான் அவரின் மருமகன் முகந்தியாஸ் உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்குத் தகுந்த பதிலடி தருவோம், பழிக்குப் பழிவாங்குவோம் என்று ஈரான் அரசு சூளுரைத்துள்ளது. ஈரானுக்கு ஆதரவாக ஈராக் நாடாளுமன்றமும் ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவத்தினர் அனைவரும் வெளியேற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது

ஆனால், ஈராக்கில் ஏராளமான செலவில் கட்டுமானங்கள் செய்திருப்பதால், அவற்றுக்கான இழப்பீடு இருந்தால்தான் வெளியேற முடியும் என்று அமெரிக்கா தெரிவித்துவிட்டது.

இந்த சூழலில் ஈராக்கில் பாக்தாத் அருகே இருக்கும் 'அன் அல் ஆசாத்' மற்றும் 'ஹாரிர் கேம்ப்' ஆகிய விமான தளங்களைக் குறிவைத்து ஈரானின் ராணுவம் இன்று அதிகாலை தாக்குதல் நடத்தியது.



தரையில் இருந்து வான் மற்றும் தரை இலக்கை துல்லியமாகத் தாக்கும் ஃபட்டா 313 ரக ஏவுகணைகளைப் பயன்படுத்தி, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர ராணுவப்படை இன்று அதிகாலை அமெரிக்க விமானத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது. 10க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதல், கெர்மான்ஷா மாநிலத்தில் இருந்து நடத்தப்பட்டதாகக்கூறப்பட்டது.

இந்நிலையில் இந்த தாக்குதலில் எத்தனை வீரர்கள் பலியானார்கள், என்ன விதமான சேதாரங்கள் ஏற்பட்டது குறித்து அமெரிக்கத் தரப்பில் எந்தவிதமான அதிகாரபூர்வமான பதிலும் இல்லை.

இந்த தாக்குதல் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் " ஆல் இஸ் வெல், ஈராக்கில் உள்ள அமெரிக்காவின் இரு ராணுவத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. அங்கு ஏற்பட்ட சேதாரங்கள், உயிர்ச்சேதங்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.

உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த, திறமையான ராணுவத்தை நாங்கள் வைத்திருக்கிறோம். என்னுடைய விரிவான அறிக்கையைப் புதன்கிழமை வெளியிடுவேன்" எனத் தெரிவித்திருந்தார்

இந்நிலையில் ஈரானின் அரசு ஊடகம் வெளியிட்ட செய்தியில், " ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்களைக் குறிவைத்து ஈரான் ராணுவம் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் அமெரிக்கத் தீவிரவாதிகள்(ராணுவ வீரர்கள்) 80 பேர் கொல்லப்பட்டனர். எந்தவிதமான ஏவுகணையையும் இடைமறித்துத் தாக்கவில்லை.

அமெரிக்கா இந்த தாக்குதலுக்கு எதிர்வினையாற்றினால், மேலும் 100 இடங்களில் ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தும். இந்த தாக்குதலில் அமெரிக்க ஹெலிகாப்டர்கள், ராணுவத் தளவாடங்கள் பெருத்த சேதமடைந்தன" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x