Published : 08 Jan 2020 10:27 AM
Last Updated : 08 Jan 2020 10:27 AM
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகரப் படையின் தளபதி காசிம் சுலைமானை அமெரிக்க ஏவுகணை வீசி கொலை செய்தமைக்கு பதிலடி தரும் விதத்தில் ஈராக்கில் உள்ள அமெரிக்க விமான தளங்கள் மீது இஸ்லாமிய புரட்சிகர படைகள் 10-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி இன்று அதிகாலை தாக்குதல் நடத்தின.
ஈரானின் 2-வது உச்ச அதிகாரம் படைத்த இஸ்லாமிய புரட்சிகரப் படையின் தளபதி காசிம் கலைமானைக் கடந்த 3-ம் தேதி பாக்தாத் விமான நிலையத்தில் வைத்து அமெரிக்க ஆள்இல்லா விமானம் ஏவுகணை வீசிக் கொன்றது. இந்த தாக்குதலில் காசிம் சுலைமான் அவரின் மருமகன் உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்குத் தகுந்த பதிலடி தருவோம், பழிக்குப் பழிவாங்குவோம் என்று ஈரான் அரசு சூளுரைத்துள்ளது. ஈரானுக்கு ஆதரவாக ஈராக் நாடாளுமன்றமும் ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவத்தினர் அனைவரும் வெளியேற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது.
ஆனால், ஈராக்கில் ஏராளமான செலவில் கட்டுமானங்கள் செய்திருப்பதால், அவற்றுக்கான இழப்பீடு இருந்தால்தான் வெளியேற முடியும் என்று அமெரிக்கா தெரிவித்துவிட்டது.
இந்த சூழலில் ஈராக்கில் பாக்தாத் அருகே இருக்கும் அன் அல் ஆசாத் மற்றும் ஹாரிர் கேம்ப் ஆகிய விமான தளங்களைக் குறிவைத்து ஈரானின் இஸ்லாமிய புரட்சிகரப்படையினர் 10-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசித் இன்று அதிகாலை தாக்குதல் நடத்தியதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஈராக்கில் உள்ள ராணுவத் தளங்கள் தாக்கப்பட்டதை அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான பென்டகனும் உறுதி செய்தது.
இதுகுறித்து எப்ஏஆர்சி செய்தி நிறுவனம் கூறுகையில், " தரையில் இருந்து இலக்குகளை துல்லியமாகத் தாக்கும் ஃபட்டா 313 ரக ஏவுகணைகளை ஏவி ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர ராணுவப்படை இன்று அதிகாலை அமெரிக்க விமானத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது. 10க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதல், கெர்மான்ஷா மாநிலத்தில் இருந்து நடத்தப்பட்டிருக்கலாம் " எனத் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே இஸ்லாமிய புரட்சிகர படை வெளியிட்ட அறிக்கையில், " அமெரிக்க தீவிரவாத படைகள் தொடர்ந்து இந்த மண்ணில் இருந்தால் கடும் சேதத்தைச் சந்திக்க வேண்டியது இருக்கும். அதிகமான சேதத்தைத் தடுக்கும்பொருட்டு ஈராக்கில் இருந்து வெளியேறிவிடுங்கள்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் குறித்து அமெரி்க்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் வெளியிட்ட அறிவிப்பில், " ஈரான் தரப்பில் இருந்து ஈராக்கில் உள்ள அமெரிக்கத் தளங்களைக் குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல் இன்று காலை நடத்தப்பட்டது. ஏறக்குறைய 12-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் வீசப்பட்டன.
அமெரிக்க பணியாளர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரங்கள் அனைத்தையும் அதிபர் ட்ரம்ப் உற்று நோக்கி வருகிறார். இதுதொடர்பாக பாதுகாப்பு அமைச்சகத்துடனும் ஆலோசித்து வருகிறார்.
இந்த தாக்குதல் குறித்து அதிபர் ட்ரம்ப் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், " அனைத்தும் நன்றாக இருக்கிறது. ஈராக்கில் உள்ள அமெரிக்காவின் இரு ராணுவத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. அங்கு ஏற்பட்ட சேதாரங்கள், உயிர்ச்சேதங்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.
உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த, திறமையான ராணுவத்தை நாங்கள் வைத்திருக்கிறோம். என்னுடைய விரிவான அறிக்கையைப் புதன்கிழமை வெளியிடுவேன் " எனத் தெரிவித்துள்ளார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT