Published : 06 Jan 2020 09:46 PM
Last Updated : 06 Jan 2020 09:46 PM

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் தலைக்கு விலை வைத்த ஈரான்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலையை கொண்டு வருபவருக்கு ஈரான் 8 கோடி அமெரிக்க டாலர்கள் (ரூ.576 கோடி) பரிசு அறிவித்து உள்ளது பரபரப்பாகியுள்ளது.

ஈரான் ராணுவத் தளபதியும் மக்களின் பெருமதிப்பையும் பெற்றவரான காசிம் சுலைமான் அமெரிக்கத் தாக்குதலில் கொல்லப்பட்டதையடுத்து இருநாடுகளுக்கு இடையேயும் பதற்றம் தலைத்துக்கியுள்ளது.

இந்த நிலையில், காசிம் சுலைமான் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

இது அந்நாட்டின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. அப்போது மூத்த அதிகாரி ஒருவர் பேசுகையில், ஈரானில் 8 கோடி மக்கள் வசிக்கின்றனர். எனவே அதனை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தலையை கொண்டு வருபவருக்கு 8 கோடி அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.576 கோடி) பரிசு வழங்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், ஈரானைச் சேர்ந்த ஒவ்வொருவரும் தங்கள் சார்பில் 1 அமெரிக்க டாலர் வழங்கி உதவ வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

முன்னதாக, ஈரான் அதிபர் பேசுகையில், அமெரிக்காவின் வெள்ளை மாளிகை மீது எங்களால் தாக்குதல் நடத்த முடியும். அதற்கான சக்தி எங்களிடம் உள்ளது, சரியான நேரத்துக்காக காத்திருக்கிறோம். போர் அறிவிக்கப்பட்டால் அது அமெரிக்காவுக்கு தான் தோல்வியாக அமையும் என்று எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x