Published : 05 Jan 2020 05:04 PM
Last Updated : 05 Jan 2020 05:04 PM
ஈரான் ராணுவத் தளபதி காசிம் சுலைமானை ஏவுகணைத் தாக்குதல் மூலம் கொலை செய்யும் முன் எங்களிடம் அமெரிக்கா ஆலோசிக்கவில்லை என்று சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.
வளைகுடா பகுதியிலும், மேற்கு ஆசியாவிலும் அதிகரித்துவரும் பதற்றத்தைத் தணிக்கும் பொருட்டு ஈரானிடமும், அமெரிக்காவிடமும் சவுதி அரேபியா சமாதான பேச்சு நடத்தி வருகிறது.
காபூலிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தை ஹிஸ்புல்லா ஆதரவுப் போராட்டக்காரர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை சூறையாடினர். அதற்குப் பதிலடியாக பாக்தாத் விமான நிலையத்தில் அமெரிக்க ராணுவம் ஆளில்லா விமானம் மூலம் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி காசிம் சுலைமான், இராக்கின் ஹஸ் அல் ஷபாபி துணை ராணுவப்படையின் துணைத் தலைவர் அபு மஹதி அல் முஹன்திஸ் உள்ளிட்ட 8 பேர் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதல் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவின் பெயரில் தற்காப்பு நடவடிக்கைக்காக எடுத்ததாகவும், அமெரிக்கர்களைப் பாதுகாக்கும் நோக்கில் தாக்குதல் நடத்தப்படப்பட்டதாக அமெரிக்கா அறிவித்தது.
அமெரிக்காவின் செயலால் ஆத்திரமடைந்த ஈரான் " தகுந்த பதிலடி கொடுப்போம், பழிக்குப்பழி வாங்கும்" என்று சூளுரைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் " அமெரிக்காவின் முட்டாள்தனமான செயல் ஆபத்தைத் தீவிரமாக்கிவிட்டது. விளைவுகளுக்கு அமெரிக்கா பொறுப்பேற்க வேண்டும்" என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால், ஈரான், அமெரிக்கா இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன் அமெரி்ககாவின் 52 பேரை ஈரான் கைது செய்து வைத்துள்ளது. அதைக் குறிப்பிட்டு இன்று ட்விட் செய்த அதிபர் ட்ரம்ப், " ஈரானின் 52 முக்கிய இடங்களைக் குறிவைத்துள்ளோம். அமெரிக்கர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், அதிவேகமாகச் செயல்பட்டு 52 இடங்களையும் அழித்துவிடுவோம்" என மிரட்டல் விடுத்திருந்தார்
இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதில் ஈரான் எந்த பதில் நடவடிக்கையும் அமெரிக்காவுக்கு எதிராக எடுத்தால், அதில் அதிகமாகப் பாதிக்கப்படக்கூடியது சவுதி அரேபியா என்பதால், தற்போது சமாதான நடவடிக்கையில் அந்தநாடு இறங்கியுள்ளது.
அதுமட்டுமல்லாமல், ஈரானின் படைத்தளபதி காசிம் சுலைமான் கொல்லப்படுவதற்கு முன், தங்களிடம் அமெரிக்கா எந்தவிதமான ஆலோசனையும் செய்யவில்லை என்றும் சவுதி அரேபியா விளக்கம் அளித்துள்ளது.
வளைகுடா பகுதியில் அதிகரித்து வரும் பதற்றத்தைத் தணிக்கும் வகையில், சவுதி அரேபியா மன்னர் சல்மான், நேற்று ஈராக் அதிபர் பர்ஹம் சல்லேஹ்வை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதன்பின் ஈராக் பிரதமர் அதெல் அப்தல் மஹ்தியிடமும் சவுதி மன்னர் சல்மான் தொலைப்பேசியில் சமாதானம் பேசியுள்ளார்.
தற்போது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.இப்போதுள்ள சூழலில் அமைதி காப்பதே நிலைமையை மோசமடையாமல் இருக்கச்செய்யும் என்று சவுதி அரேபிய மன்னர் சல்மான் வலியுறுத்தியதாகச் சவுதி அரேபியா அரசு தெரிவித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் மன்னர் சல்மான், தனது சகோதரரும் துணை பாதுகாப்பு அமைச்சருமான காலித் பின் சல்மானை அமெரிக்காவுக்கும், லண்டனுக்கும் அனுப்ப முடிவு செய்துள்ளார். வெள்ளை மாளிகையில் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளைச் சந்தித்து சவுதி அரேபிய மன்னரின் இளைய சகோதரர் காலித் பன் சல்மான் சமாதான பேச்சு நடத்த உள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவுக்கு மிகவும் நட்பு நாடுகளாக சவுதி அரேபியாவும்,ஐக்கிய அரபு அமீரகமும் இருந்து வருகின்றன. அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுக்க ஈரான் எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதில் சவுதி அரேபியா கடுமையாகப் பாதிக்கப்படும் என்பதால் சமாதான விஷயத்தில் தீவிரமாக இறங்கியுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் சவுதி எண்ணெய் நிறுவனங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப்பின் சவுதி அரேபியாவும், ஐக்கிய அரபு அமீரகமும் ஈரானுடன் இணக்கமாகச் செல்லவும், எந்தவிதமான முரண்பாடும் இல்லாமல் தவிர்த்து வருகின்றன.
ஒருவேளை ஈரான் ஆதரவு படைகள் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்களையும், ஹர்முஸ் நீர் வழித்தடங்களிலும் தாக்குதல் நடத்தும் திறன் கொண்டவை. அவ்வாறு நடந்தால் சவுதி அரேபியாவின் எண்ணெய் வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்படும் என்பதால், பதற்றம் அதிகரிக்கவிடாமல் சமானத்தானத்தில் சவுதி அரேபியா ஈடுபட்டு வருகிறது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT