Last Updated : 03 Jan, 2020 03:30 PM

 

Published : 03 Jan 2020 03:30 PM
Last Updated : 03 Jan 2020 03:30 PM

அமெரிக்கா-ஈரான் பதற்றம்: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 4 சதவீதம் அதிகரிப்பு; இந்தியாவில் பாதிப்பு இருக்குமா?

பிரதிநிதித்துவப்படம்

ஹாங்காங்

ஈரானின் குட்ஸ் படைப்பிரிவு தளபதி குவாசிம் சுலைமானை அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் மூலம் கொலை செய்ததையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தால் சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை திடீரென 4 சதவீதம் உயர்ந்தது.

ஈராக்கில் அமெரிக்கர்களைத் தாக்கத் திட்டமிட்டிருந்ததாகக் கூறி, ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமான், ஈராக்கின் ஹஸ் அல் ஷபாபி துணை ராணுவப்படையின் துணைத் தலைவர் அபு மஹதி அல் முஹன்திஸ் ஆகியோரை பாக்தாத் விமான நிலையம் அருகே ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தி அமெரிக்கப் படைகள் கொலை செய்தன.

இந்தத் தாக்குதலும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவுப்படிதான் நடந்தது என்று அமெரிக்காவின் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் அறிவித்தது.

பெட்ரோலிய கச்சா எண்ணெய் உற்பத்தியில் உலக அளவில் முக்கியமாக இருக்கும் நாடுகளில் ஈரானும் ஒன்றாகும். இந்தத் தாக்குதலுக்குப் பின், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை திடீரென 4.4 சதவீதம் அதிகரித்து, 69.16 டாலராக அதிகரித்தது.

வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியேட் சந்தையில் 4.3 சதவீதம் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து, 63.84 டாலராக அதிகரித்தது. இதனால், மத்திய கிழக்கு நாடுகளில் மீண்டும் போர் மேகம் சூழும் அச்சத்தில் பெட்ரோலியக் கச்சா எண்ணெய் விலை திடீரென அதிகரித்தது.

ஏற்கெனவே ஈரான், அமெரிக்கா இடையிலான நட்புறவில் விரிசல் இருந்து வந்த நிலையில், சுலைமான் கொல்லப்பட்டதற்குப் பின் இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மேலும் மோசமடையக்கூடும். இதை உறுதி செய்யும் விதமாகவே, ஈரான் விடுத்த அறிக்கையிலும், அமெரிக்கா பேராபத்து விளைவிக்கும் செயலைச் செய்து, முட்டாள்தனமான முடிவை எடுத்துவிட்டது என்று தெரிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றம், இந்திய பங்குச் சந்தையில் மட்டுமின்றி, ஹாங்காங், ஜப்பான், சீனா ஆகிய நாடுகளின் பங்குச்சந்தையிலும் எதிரொலித்து, பங்குகள் விலை குறைந்தன. மும்பை பங்குச்சந்தையில் எண்ணெய் நிறுவனப் பங்குகள் அனைத்தும் திடீரென விலை குறையத் தொடங்கின. மேலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும், வர்த்தகத் தொடக்கத்தில் ரூ71.16 ஆக வீழ்ச்சி அடைந்தது.

இரு நாடுகளுக்கு இடையே அடுத்து வரும் நாட்களில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கும் பட்சத்தில் பெட்ரோலியக் கச்சா விலையில் பெரிய அளவுக்கு மாற்றம் ஏற்படும்.

இதுகுறித்து ஈகுனாமிக்ஸ் ஆய்வு மற்றும் ஆலோசனை நிறுவனத்தின் நிறுவனர் ஜி.சொக்கலிங்கம் கூறுகையில், " ஈரான்- அமெரிக்கா இடையே இப்போது இருக்கும் பதற்றம் இன்னும் சில மாதங்கள் நீடித்தால், இந்தியப் பொருளாதாரத்தை மீண்டும் பாதிக்கும். கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால், நாட்டில் பணவீக்கம் அதிகரிக்கும்.

தற்போது இந்தியப் பொருளாதாரம் சரிவில் இருந்து மீண்டு வரும் அறிகுறி தெரிந்தபோது இதுபோன்ற பதற்றமான சூழல் வளர்ச்சிக்குச் சவாலாக இருக்கும். ஈரான் அடுத்தகட்டமாக என்ன செய்யப்போகிறது என்பதை வைத்து சந்தை முடிவுகள், கச்சா எண்ணெய் விலை முடிவாகும்" எனத் தெரிவித்தார்.

சந்தை ஆய்வாளர் நரேந்திர சோலங்கி கூறுகையில், "அமெரிக்கா-ஈரான் இடையே தற்போது ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலால் குறுகிய காலத்துக்கு வேண்டுமானால் சந்தையின் ஊசலாட்டத்தைப் பயன்படுத்தி சிலர் லாபமீட்டலாம். ஆனால், நீண்டகாலத்துக்குப் பாதிப்பு இருக்காது. ஈரான் அடுத்து என்ன செய்யப் போகிறது, என்ன விதமான பதிலடி கொடுக்கப்போகிறது என்பதைப் பொறுத்துதான் சந்தையின் நிலவரம் தெரியவரும்.

ஒருவேளை அமெரிக்காவுக்கு எதிராக ஈரான் ஏதாவது பதில் நடவடிக்கையில் இறங்கி, ஈராக், யேமன்,சிரியா, லெபனான் ஆகியவற்றைத் தாக்கி அமெரிக்காவுக்குப் பெரிய சேதத்தைத் தந்தால், கச்சா எண்ணெய் விலை கடுமையாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் கச்சா எண்ணெய் வரும் பெர்ஷியன் வளைகுடா பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டு, எண்ணெய் கொண்டுவருவதில் இடையூறு ஏற்படலாம். ஆதலால், ஈரான் நடவடிக்கையைப் பொறுத்தே அடுத்த கட்டமாக சந்தையின் நகர்வுகள் இருக்கும்" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x