Published : 20 Dec 2019 11:06 AM
Last Updated : 20 Dec 2019 11:06 AM
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்குச் செல்லத் தயாராக இருக்கும் தகவல் தொழில்நுட்பப் பணியாளர்களுக்கு கட்டுப்பாடுகள், தடைகள் விதிக்கக்கூடாது என்று அமெரிக்காவிடம் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் ஹெச்-1பி விசாவின் முக்கியத்துவம் குறித்தும் அமெரிக்காவிடம் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
தகவல் தொழில் நுட்பத்துறையில் இருக்கும் பணியாளர்களுக்கு அதிகமாக வழங்கப்படுவது ஹெச்-1பி விசா ஆகும். இந்தியாவில் உள்ள அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்துக்கு இந்தியாவில் இருந்து பணியாளர்களை அமர்த்தும்போது வழங்கப்படும் விசா ஆகும். இந்த ஹெச்1பி விசா அதிகமாக இந்தியா, சீனாவைச் சேர்ந்த தொழிலாளர்களுக்குத்தான் வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், அமெரிக்காவில் அதிபர் ட்ரம்ப் ஆட்சிக்கு வந்தபின் அமெரிக்காவில் வேலை அமெரிக்க மக்களுக்கே என்ற கோஷத்தை முன்வைத்தார். அதுமட்டுமல்லாமல் ஹெச்-1பி விசா வழங்குவதிலும் பல்வேறு கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்தார்.
அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்றச் சேவை (யுஎஸ்சிஐஎஸ்) புள்ளிவிவரக் கணக்கின்படி, கடந்த 2017-ம் ஆண்டில் 37 லட்சத்துக்கு 3 ஆயிரத்து 400 பேருக்கு ஹெச்1பி விசா வழங்கப்பட்டது.
ஆனால் இது அமெரிக்காவின் பல்வேறு கெடுபிடிகளால் கடந்த 2018-ம் ஆண்டு 10 சதவீதம் சரிந்துள்ளது. அதாவது கடந்த 2018-ம் ஆண்டில் 33 லட்சத்து 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே ஹெச்1பி விசா வழங்கப்பட்டுள்ளது. 2017-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில், ஹெச்1பி விசாவுக்கு ஒப்புதல் வழங்கும் அளவு 93 சதவீதத்தில் இருந்து 85 சதவீதமாகக் குறைந்துள்ளது.
இந்நிலையில் 2+2 என்ற அதிகாரபூர்வச் சந்திப்புக்காக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் 2 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றனர்.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, பாதுகாப்புத் துறை அமைச்சர் மார்க் எஸ்பர் ஆகியோருடன் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர் ஆகியோர் கடந்த இரு நாட்களாக பல்வேறு கட்டங்களில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இரு நாடுகள் தொடர்பாகப் பாதுகாப்பு, வெளியுறவு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பையும் மரியாதை நிமித்தமாக இரு மத்திய அமைச்சர்களும் நேற்று சந்தித்துப் பேசினர்.
இதையடுத்து, அமெரிக்காவில் இருந்து புறப்படும் முன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வாஷிங்டன் நகரில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அதில் அவர் கூறுகையில், "அமெரிக்க அதிகாரிகள், அமைச்சர்களுடன் பல்வேறு கட்டங்களில் பேச்சுவார்த்தை நடத்தினோம். இதில் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்குப் பணிக்கு வரும் பணியாளர்களின் ஆர்வத்தைக் குறைக்கும் வகையில் தேவையில்லாத தடைகளை ஏற்படுத்தக்கூடாது என்று வலியுறுத்தினேன். குறிப்பாக ஹெச்-1பி விசாவின் முக்கியத்துவம் குறித்துத் தெரிவித்தேன்.
வெள்ளை மாளிகையில் அமெரிக்கப் பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையனிடம் வெளியுறவு தொடர்பாக ஆலோசனை நடத்தினேன். ஹெச்-1பி விசா வழங்குவதில் பல்வேறு கட்டுப்பாடுகளைக் கொண்டுவருவதற்குச் சட்டத் திருத்தம் கொண்டுவர அமெரிக்கா முயன்று வருகிறது. அதுகுறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இரு நாடுகளின் பொருளாதாரக் கூட்டுறவில் அறிவுசார் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. இருநாட்டு உறவுகளை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்லும் பாலமாக இருக்கும். அறிவுசார் பங்களிப்பு அமெரிக்காவுக்கும் முக்கியம், இந்தியாவுக்கும் முக்கியம். ஆதலால், இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்குப் பணிக்குச் செல்லும் பணியாளர்கள் ஆர்வத்தைக் குறைக்கும் வகையில் செயல்படாதீர்கள் என வலியுறுத்தினேன்" எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT