Published : 10 Dec 2019 03:02 PM
Last Updated : 10 Dec 2019 03:02 PM
அண்டை நாடுகளின் மதரீதியான விவகாரத்தில் தலையிடும் வகையில் தவறான, நல்லெண்ணமற்ற நோக்கத்தோடு குடியுரிமை திருத்த மசோதாவை இந்தியா கொண்டுவந்துள்ளது என்று இந்தியாவுக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது.
குடியுரிமைத் திருத்த மசோதாவை மக்களவையில் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிமுகம் செய்தார். ஏறக்குறைய 9 மணிநேரம் நீண்ட விவாதத்துக்குப்பின் மசோதா நள்ளிரவில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 311 உறுப்பினர்களும், எதிராக 80 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது
மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டபின் நள்ளிரவில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்கம் இந்த மசோதாவைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:
இந்திய அரசு நிறைவேற்றியுள்ள பிற்போக்குத்தனமான, பாகுபாடுகளை உருவாக்கும் குடியுரிமைத் திருத்த மசோதாவை நாங்கள் கண்டிக்கிறோம். அனைத்து சர்வதேச விதிமுறைகளையும், ஒப்பந்தங்களையும் இந்த மசோதா மீறியுள்ளது. தவறான, நல்லெணமற்ற நோக்கத்தில் அண்டை நாடுகள் விவகாரத்தில் இந்தியா தலையிடும் முயற்சி என்பது தெளிவாகத் தெரிகிறது.
சர்வதேச மனித உரிமைகளை முழுமையாக மீறியும், மதரீதியாகவே அல்லது நம்பிக்கை சார்ந்த அடிப்படையில் பாகுபாடு பார்க்கக்கூடாது என்ற சர்வதேச உடன்படிக்கைகளை மீறி இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்தியா பாகிஸ்தான் இடையே இருக்கும் பல்வேறு இருதரப்பு ஒப்பந்தங்களுக்கு முரணான வகையில் இந்த மசோதா இருக்கிறது. குறிப்பாக அந்தந்த நாடுகளின் சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு, உரிமைகள் குறித்து கவலையை ஏற்படுத்துகிறது.
இந்த மசோதா என்பது இந்தியாவை இந்து தேசமாக மாற்ற வேண்டும் என்ற வலதுசாரி இந்து தலைவர்கள் பல ஆண்டுகளாகச் சிந்தித்து, இடைவிடாமல் பேசி வரும் நிலையில், அதை நனவாக்கும் வகையில் இந்திய அரசு இதைக் கொண்டுவந்துள்ளது
தீவிரமான இந்துத்துவா சித்தாந்தங்கள் மற்றும் மதரீதியான மேலாதிக்க சிந்தனைகளுடன் இந்த மசோதா இருக்கிறது. அண்டை நாடுகளின் மதரீதியான விவகாரங்களில் தலையிடுவதாக இருப்பதால் இதைப் பாகிஸ்தான் ஆதரிக்காது " எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பிரமதர் இம்ரான் கான் ட்விட்டரில் வெளியிட்ட கருத்தில் குடியுரிமைத் திருத்த மசோதாவைக் கண்டித்துள்ளார். அவர் கூறுகையில், " குடியுரிமைத் திருத்த மசோதா பாகிஸ்தானுடன் இந்தியா வைத்துள்ள இருதரப்பு ஒப்பந்தங்களையும், சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள், விதிகளையும் மீறுவதாக அமைந்துள்ளது. ஆர்எஸ்எஸ் இந்துராஷ்டிராவின் விஸ்தரிப்பு வடிவத்தின் ஒருபகுதி" எனத் தெரிவித்துள்ளார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT