Published : 19 Nov 2019 03:31 PM
Last Updated : 19 Nov 2019 03:31 PM
3 மாதங்களாக நிறுத்தி வைத்திருந்த இந்தியாவுடனான தபால் சேவையை, பாகிஸ்தான் மீண்டும் தொடங்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கி, 370-வது பிரிவை மத்திய அரசு திரும்பப் பெற்றது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தையும் 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து மத்திய அரசு அறிவித்தது.
இதனால் கடும் அதிருப்தியுடன் இருந்த பாகிஸ்தான் அரசு, இந்தியாவுடனான பேருந்து சேவை, வர்த்தக சேவையை நிறுத்தியது. டெல்லி-லாகூர் இடையே சென்று வந்த பேருந்து சேவையை முன் அறிவிப்பின்றி நிறுத்தி, தபால் சேவையையும் நிறுத்தியது. இதனால் எப்போது இரு நாடுகளுக்கும் இடையே தபால் சேவை தொடங்கும் எனத் தெரியாமல் இருந்து வந்தது.
இந்நிலையில், இந்தியாவுடனான தபால் சேவையை மட்டும் பாகிஸ்தான் தொடங்கியுள்ளதாகவும், பார்சல் சேவையை இன்னும் தொடங்கவில்லை என்றும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவுக்குச் செல்லும் தபால்களை பாகிஸ்தான் தபால் நிலையங்கள் பெற்றுக்கொண்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆனால், இதுதொடர்பாக பாகிஸ்தான் அரசு சார்பில் எந்தவிதமான அதிகாரபூர்வமான தகவலும் இல்லை. ஆனால், ஆகஸ்ட் 27-ம் தேதிக்குப் பின் இந்தியாவில் இருந்து வரும் எந்தவிதமான தபால்களையும் ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் தபால் துறைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அக்டோபர் மாதம் கூறுகையில், "இந்தியாவிடம் எந்தவிதமான முன் அறிவிப்பும் செய்யாமல் பாகிஸ்தான் திடீரென தபால் சேவையை நிறுத்தியது. பாகிஸ்தானின் முடிவு சர்வதேச தபால் கூட்டமைப்பு விதிகளுக்கு முரணானது. ஆனால், பாகிஸ்தான் பாகிஸ்தான்தான்.
இதற்கு முன் போர்க்காலங்கள், எல்லையில் பதற்றம், குண்டுவீச்சு போன்ற பதற்றமான சூழல் இருந்தபோதிலும் கூட பாகிஸ்தான் தபால் சேவையை நிறுத்தவில்லை. இப்போது நிறுத்தியது முன் எப்போதும் இல்லாத நிகழ்வு" எனத் தெரிவித்திருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT