Published : 15 Nov 2019 12:02 PM
Last Updated : 15 Nov 2019 12:02 PM
இந்தோனேசியாவின் கடற்கரைப் பகுதியான மொலுக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதுகுறித்து அமெரிக்க புவியியல் மையம், ”இந்தோனேசியாவின் வடகிழக்கில் உள்ள மொலுக்கா கடற்கரைப் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆகப் பதிவாகியது. இந்த நிலநடுக்கத்தின் ஆழம் 73 கி.மீ. இதன் காரணமாக அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நிலநடுக்க அதிர்வுகள் வடக்கு மலுக்கா மாகாணத்திலும் உணரப்பட்டது” என்று தெரிவித்துள்ளது.
சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து கடற்கரைப் பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்படனர்.
இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
கடந்த 2018 ஆம் ஆண்டு ரிக்டர் அளவில் ஏற்பட்ட 7.5 சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக இந்தோனேசியாவில் சுனாமி அலை தாக்கியது. இதில் 2,000க்கும் அதிகமானவர்கள் பலியாகினர்.
2004 ஆம் ஆண்டில் இந்தோனேசியாவிலுள்ள சுமத்ரா தீவில் ரிக்டர் அளவில் 9.3 சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சுனாமி தாக்குதலை அடுத்து 2,20,000 பேர் பலியாகினர்.
பசிபிக் நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும் பகுதியில் உள்ளது இந்தோனேசியா. இப்பகுதியில் பூமியைத் தாங்கும் பெரும்பாறைகள் ஒன்றையொன்று உரசிக்கொள்ளும். இதன் காரணமாக இங்கும் நிலநடுக்க அதிர்வுகளும், எரிமலை வெடிப்புகளும் அடிக்கடி ஏற்படுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT