Published : 05 May 2014 05:21 PM
Last Updated : 05 May 2014 05:21 PM
இந்திய விடுதலைப் போராட்ட வீரர் பகத் சிங் தூக்கிலிடப்பட்டு 83 ஆண்டுகள் கழித்து, சாண்டர்ஸ் கொலை வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் அவரது பெயர் இடப்பெறவில்லை என்று பாகிஸ்தான் காவல்துறை தெரிவித்துள்ளது.
பகத் சிங்கின் தூக்குத் தண்டனைக்கு முக்கிய காரணமாக, இவ்வழக்கின் விவரத்தை தற்போது பாகிஸ்தானின் லாகூர் காவல்துறை கண்டறிந்துள்ளது.
1931-ஆம் ஆண்டு லாகூரில் பிரிட்டிஷ் காவல்துறை அதிகாரி சாண்டர்ஸ் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் பகத் சிங், சுக்தேவ், ராஜ்குரு ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர்.
பகத் சிங் நினைவுச் சின்ன அமைப்பின் தலைவர் இம்தியாஸ் ரஸித் குரேஷி, இவ்வழக்கின் முதல் தகவல் அறிக்கையின் நகலை கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
உருது மொழியில் எழுதப்பட்டிருந்த இந்த முதல் தகவல் அறிக்கை, அனார்கலி காவல் நிலையத்தில் 1928-ஆம் ஆண்டு டிசம்பர் 17-ம் தேதி மாலை 4.30 மணிக்கு இரண்டு அடையாளமறியா நபர்கள் மீது போடப்பட்டிருந்தது.
அனார்கலி காவல் அதிகாரி அளித்த இப்புகாரில், இருவரில் ஒருவர் 5 அடி உயரமுள்ள ஒல்லியான உருவம் கொண்ட மனிதர் எனவும், இந்து முகச் சாயல் கொண்ட அவருக்கு சிறிய மீசை உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், சாம்பல் நிற குர்தாவும், வெள்ளை பைஜாமாவும், கருப்பு தொப்பியும் அணிந்திருந்ததாக கூறப்பட்டுள்ளது.
லாகூர் நீதிமன்றத்திடமிருந்து முதல் தகவல் அறிக்கையை பெற்ற குரேஷி, இவ்வழக்கில் தொடர்புடைய 450 சாட்சிகளை விசாரிக்காமலே பகத் சிங்கிற்கு தூக்கு தண்டணை அளிக்கப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், பகத் சிங்கின் வழக்கறிஞர்கள் எவரையும் குறுக்கு விசாரணை நடத்த வாய்ப்பளிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில், இவ்வழக்கை மீண்டும் விசாரிக்க லாகூர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள குரேஷி, சாண்டர்ஸ் வழக்கில் பகத் சிங் குற்றமற்றவர் என்பதை தான் நிரூபிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, இவ்வழக்கை அரசியல் சாசன அமர்வு விசாரிப்பதற்காக, தலைமை நீதிபதிக்கு லாகூர் உயர் நீதிமன்றம் பரிந்துரைத்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT