Published : 10 May 2014 10:00 AM
Last Updated : 10 May 2014 10:00 AM
இரண்டாம் உலகப் போர் வெற்றியைக் கொண்டாடும் வகையில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் வெள்ளிக்கிழமை பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பு நடை பெற்றது.
1945-ம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மனியின் நாஜி படை களை வீழ்த்தி ரஷ்ய ராணுவம் வெற்றி பெற்றது. இதை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் மே 9-ம் தேதி ராணுவ அணிவகுப்பு நடத்தப்படுகிறது. தற்போது உக்ரைன் விவகாரத்தால் ஐரோப்பிய யூனியனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.
இந்நிலையில் ரஷ்ய ராணுவத்தின் வருடாந்திர 69-வது ஆண்டு அணிவகுப்பு மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் மிக பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. வழக்க மாக 45 நிமிடங்கள் மட்டுமே நடைபெறும் அணிவகுப்பு நேற்று சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது.
ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 11,000 வீரர்கள் அணிவகுப் பில் பங்கேற்றனர். ராணுவ வலிமையைப் பறைசாற்றும் வகையில் அதிநவீன ஏவுகணைகள், அணுஆயுதங்களைச் சுமந்து செல்லும் போர் விமானங்கள் கண்காட்சியில் கம்பீரமாக வலம் வந்தன.
ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட அதிபர் விளாடிமிர் புதின், ரஷ்யர்களின் இதயம் இரும்பு போன்றது, இரண்டாம் உலகப்போரின்போது ஐரோப்பாவை அடிமைத்தனத்தில் இருந்து மீட்டது ரஷ்யாதான் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
கிரிமியா அணிவகுப்பில் புதின்
உக்ரைனின் கிரிமியா பகுதியை ரஷ்யா அண்மையில் தன்னுடன் இணைத்துக் கொண்டது. அங்குள்ள கடற்படைத் தளத்தில் நடைபெற்ற ராணுவ அணிவகுப் பிலும் அதிபர் புதின் கலந்து கொண்டார் என்று உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் உள்ளிட்ட ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கிழக்கு உக்ரைனில் கருத்துக் கணிப்பு
கிழக்கு உக்ரைன் பகுதியை ஆயுதம் தாங்கிய எதிர்ப்புக் குழுவினர் கைப்பற்றியுள்ளனர். தொழில் பகுதியான அங்கு ரஷ்ய மொழி பேசும் மக்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். ரஷ்ய ஆதரவுடனேயே ஆயுதம் தாங்கிய குழுவினர் கிழக்குப் பகுதியை கைப்பற்றி இருப்பதாக உக்ரைன் அரசும் ஐரோப்பிய யூனியனும் குற்றம் சாட்டி வருகின்றன. இதனை ரஷ்யா மறுத்து வருகிறது.
கிழக்குப் பகுதியை தன்னாட்சி பெற்ற பிராந்தியமாக அறிவிப்பது தொடர்பாக எதிர்ப்பாளர்கள் சார்பில் மே 11-ம் தேதி கருத்துக் கணிப்பு நடைபெற உள்ளது. இதனை தள்ளிவைக்கக் கோரி ரஷ்ய அதிபர் புதின் விடுத்த வேண்டுகோளை எதிர்ப்பாளர்கள் ஏற்கவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT