Published : 15 Oct 2019 11:01 AM
Last Updated : 15 Oct 2019 11:01 AM
வாஷிங்டன்
சிரியாவில் உள்ள குர்து போராளிகள் மீது தாக்குதல் நடத்தி வரும் துருக்கிக்கு எதிராக பல்வேறு வர்த்தக தடைகளை விதித்து அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
துருக்கி எல்லையையொட்டிய சிரியாவில் குர்து போராளிகள் எல்லையோரப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்று கூறி அவர்கள் மீது தாக்குதல் நடத்த துருக்கி அதிபர் எர்டோகன் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து சிரியாவில் துருக்கிப் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
துருக்கியின் தாக்குதல் காரணமாக சுமார் 4 லட்சம் மக்கள் சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்து வெளியேறியுள்ளனர். பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர்.
சிரியாவின் வடக்குப் பகுதியில் குர்து போராளிகளுக்கு எதிராக துருக்கி மேற்கொண்டுள்ள இந்த ராணுவ நடவடிக்கைக்கு இந்தியா உட்பட பல நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்தநிலையில் துருக்கியின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து அந்நாட்டின் மீது தடை விதித்து அமெரிக்கா உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி துருக்கியில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கான வரியை 50 சதவீதம் அமெரிக்கா அதிகரித்துள்ளது.
துருக்கியுடன் செய்ய இருந்த 100 பில்லியன் டாலர்கள் வரத்தக உடன்படிக்கையை உடனடியாக நிறுத்தி வைப்பதாகவும், இதுமட்டுமின்றி துருக்கி இரும்பு இறக்குமதிக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 50 சதவீத வரி மீண்டும் விதிக்கப்படுவதாகவும் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதுமட்டுமின்றி துருக்கி அதிகாரிகள் மற்றும் துருக்கி பாதுகாப்பு மற்றும் எரிசக்தி துறை அமைச்சர்களுக்கும் அமெரிக்கா தடை விதித்துள்ளது.
இதுமட்டுமின்றி துருக்கி உடனடியாக சிரியாவில் நடத்தி வரும் தாக்குதலை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக பேச்சவார்த்தை நடத்த அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரைன் ஆகியோர் துருக்கிக்கு செல்லவுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT