Published : 23 Sep 2019 11:55 AM
Last Updated : 23 Sep 2019 11:55 AM
ஹூஸ்டன்
அமெரிக்காவில் பிரதமர் மோடியை வரவேற்று இந்தியர்கள் நடத்திய ‘ஹவுடி மோடி’ நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் விரைவில் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு ஆதரவு திரட்டும் நிகழ்ச்சியாக ட்ரம்ப் பயன்படுத்திக் கொண்டார்
அமெரிக்காவில் 2016 அதிபர் தேர்தலின்போது யாரும் எதிர்பாராத விபத்தாக அது நடந்தது. ஹிலாரிதான் அதிபர் என எதிர்பார்த்த நிலையில் ட்ரம்ப் அதிபரானார். அமெரிக்கர்கள் பலராலேயே இந்த முடிவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இந்தநிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு புதிய அதிபரை தேர்ந்தெடுக்க அமெரிக்கா தயாராகி வருகிறது. அதிபர் ட்ரம்பின் வெறுப்பு அரசியல் பல்வேறு விமர்சனங்களை எழுப்பினாலம் அண்மைகாலமாக அவர் தனது செயல்பாடுகளை மாற்றி வருகிறார்.
அமெரிக்காவை மேன்மை மிகு நாடாக மாற்றுவேன், அமெரிக்கர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்குவேன், சட்டவிரோத குடியேறிகளை தடுக்க மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்புவேன் என்ற பல வாக்குறுதிகளை அளித்தார்.
இவையெல்லாம் கடந்த தேர்தலில் ட்ரம்புக்கு அமெரிக்கர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று தந்தது. அதேசமயம் இந்தியர்கள் உட்பட பல வெளிநாட்டினர் கடந்த தேர்தலில் ட்ரம்புக்கு எதிராக வாக்களித்தனர்.
82 சதவீத அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளின்டனுக்கு ஆதரவாக வாக்களித்ததாகவும், வெறும் 9 சதவீதம் இந்தியர்கள் மட்டுமே ட்ரம்புக்கு வாக்களித்ததாகவும் ஆசிய பசிபிக் தேர்தல் கருத்து கணிப்பு தெரிவிக்கிறது. இதற்கு காரணம் அமெரிக்காவில் மற்ற நாட்டினர் குடியேறுவதற்கு ட்ரம்ப் காட்டி எதிர்ப்பு முக்கியமானது. வெளிநாட்டினர் அமெரிக்காவில் வந்து தங்க முடியாமல் செய்வேன் என்ற அவரது தேர்தல் பேச்சுகளை இந்தியர்கள் ஏற்கவில்லை.
அமெரிக்க அதிபர் தேர்தல் மீண்டும் நடைபெறவுள்ள நிலையில் அதில் குடியரசு கட்சி சார்பில் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. இதனால் அவர் மீண்டும் பிரச்சாரத்தை தொடங்கி விட்டார். அமெரிக்காவை மீண்டும் வலியான நாடக மாற்றுவேன் என்ற முழுக்கத்தை முன் வைத்து அவர் பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்தநிலையில், ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, அமெரிக்காவுக்கு 7 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி சென்றுள்ளார். முதல் நிகழ்ச்சியாக ஹூஸ்டன் நகரில் நேற்று அமெரிக்க இந்தியர்கள் சார்பில் ‘ஹவுடி மோடி’ நிகழ்ச்சி நடந்தது.
ஹூஸ்டன் நகரின் என்ஆர்ஜி அரங்கில் நேற்று நடந்த இந்த நிகழ்ச்சியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க இந்தியர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன், அமெரிக்க அதிபர் ட்ரம்பும் பங்கேற்றார்.
அவர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முடிவு செய்தபோதே இது தனது தேர்தல் பிரச்சாரத்துக்கான வாய்ப்பாக ட்ரம்ப் பயன்படுத்த போகிறார் என்ற விமர்சனம் முன் வைக்கப்பட்டது. அதுபோலவே இந்த வாய்ப்பை ட்ரம்ப் பயன்படுத்திக் கொண்டதாக கூறப்படுகிறத.
இந்த கூட்டத்தில் பேசிய ட்ரம்பின் உரை வழக்கமான அவரது அரசியல் பேச்சாக இல்லை. வரிகுறைப்பு, வேலைவாய்ப்பு, மெக்ஸிகோ எல்லையில் சுவர் கட்டுதல், ஜனநாயக கட்சியினர் மீது சேற்றை வாரி இரைக்கும் பேச்சு என எதுவும் இல்லை. மாறாக மிகவும் அடக்கமான உரையாக ட்ரம்ப் பேச்சு இருந்தது.
இந்த கூட்டத்தில் ஹூஸ்டன் மட்டுமின்றி அமெரிக்காவின் பல பகுதிகளிலும் வசிக்கும் இந்தியர்களும் கலந்து கொண்டனர். எனவே இந்த கூட்டத்தில் சட்டவிரோத குடியேறிகள் பிரச்சினையை பற்றி அவர் பேசவில்லை. மாறாக இந்தியர்கள் சட்டபூர்வமாக குடியேறி வருவதாகவும், அமெரிக்காவின் பல துறைகளின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வருவதாகவும் அவர் புகழ்ந்தார்.
அவர் பேசும்போது ‘‘இந்திய பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளேன். நிரம்பி வழியும் ஸ்டேடியத்தில் பல்லாயிரக்கணக்கானோர் முன்னிலையில் உரையாற்ற கிடைத்த வாய்ப்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் அனைவரும் அமெரிக்கர்கள் என்பதை எண்ணும்போது மிக மகிழ்ச்சி அடைகிறேன்.
பெருமிதம் கொள்கிறேன். அமெரிக்காவின் மதிப்பை உணர்ந்து அதற்கு உறுதுணையாக இந்தியரகள் பணியாற்றி வருகின்றனர். இதுபோன்ற குடியேறிகளை அமெரிக்கா எப்போதுமே விரும்புகிறது. மருத்துவம், தகவல் தொழில்நுட்பம் என பலதுறைகளிலும் இந்திய சமூகம் பெரும் தொண்டு ஆற்றி வருகிறது’’ எனக் கூறினார்.
இந்தியர்களின் எண்ணிக்கையை விடவும் அவர்கள் பொருளாதார வலிமை கொண்ட சமூக குழுவாக அமெரிக்காவில் வசித்து வருவதாக பே ரிசர்ச் மையம் குறிப்பிட்டுச் சொல்கிறது.
எனவே வாக்களிப்பது மட்டுமல்லாமல் தேர்தல் நிதி வழங்குவதிலும் இந்தியர்கள் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கின்றனர். கடந்த தேர்தலில் இந்திய சமூகம் பெரிய அளவில் வாக்களிக்காதபோதும், இந்தமுறை தமக்கு ஆதரவாக வாக்களிக்கும் என ட்ரம்ப் எதிர்பார்க்கிறார்.
அதற்கு ஏற்ப ‘ஹவுடி மோடி’ நிகழ்ச்சியை ட்ரம்ப் பயன்படுத்திக் கொண்டதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். வாஷிங்டன் போஸ்ட் உட்பட அமெரிக்க பத்திரிகைகளும் அமெரிக்க தேர்தலையொட்டி ட்ரம்ப் தனது செயல்பாடுகளை மாற்றி வருவதாக சுட்டிக்காட்டியுள்ளன.
இந்த கூட்டத்தில் ட்ரம்ப் மட்டுமின்றி அவரது கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள், ஆளுநர்கள், முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதுபோலவே எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
ஐஏஎன்எஸ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT