Published : 14 Aug 2019 11:39 AM
Last Updated : 14 Aug 2019 11:39 AM
ஹாங்காங்கில் மோசமான நிலை நீடிப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருத்தம் தெரிவித்துள்ளார்.
ஹாங்காங்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ரயில் நிலையம் உட்பட பல்வேறு பகுதிகளில் அரசுக்கு எதிராகப் போராட்டக்காரர்கள் அமைதிப் பேரணி சென்றனர். பல இடங்களில் போலீஸார் பெட்ரோல் குண்டுகள் வீசித் தாக்குதல் நடத்தியதில் போராட்டக்காரர்கள் பலத்த காயம் அடைந்தனர்.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை விமான நிலையங்களில் மீண்டும் போராட்டக்கார்கள் பேரணியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து மீண்டும் போராட்டக்காரர்களுக்கு, போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஹாங்காங்கில் பதற்றம் நிலவி வருகிறது.
போராட்டக்காரர்களை ஹாங்காங்கை பள்ளத்தில் தள்ளி வீடாதீர்கள் என்று ஹாங்காங் நிர்வாக தலைவர் கேரில் லேம் செவ்வாய்க்கிழமை வேண்டுகோள் விடுத்தார். சீனாவும் ஹாங்காங்கில் போராட்டக்காரர்கள் தொடர் போராடங்களை கடுமையாக கண்டித்துள்ளது.
இந்த நிலையில் ட்ரம்ப் ஹாங்காங் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து பென்சில்வேனியாவில் ட்ரம்ப் கூறும்போது, “ ஹாங்காங்கில் தற்போது மோசமான நிலை நீடிக்கிறது. என்ன நடக்கிறது என்று பொறுந்திருந்து பார்போம். நான் யாரும் இதில் காயம் அடையமாட்டார்கள் என்று நம்புகிறேன். யாரும் கொல்லப்பட மாட்டார்கள் என்று நம்புகிறேன்.
ஹாங்காங்கின் எல்லையை நோக்கி சீனா தனது துருப்புகளை நிறுத்தியுள்ளதாக புலனாய்வு அறிக்கைகள் தெரிவித்துள்ளன. அனைவரும் பொறுமையாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
ஹாங்காங் போராட்ட பின்னணி:
இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தில் இருந்து ஹாங்காங் விடுவிக்கப்பட்ட பின்னர் கடந்த 1997-ம் ஆண்டு சீனாவின் நிர்வாகப் பகுதிகளில் ஒன்றானது. சீனாவின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்தாலும், ஹாங்காங் நாட்டுக்கென தனி கரன்சி, சட்டம், அரசியலமைப்பு எல்லாம் உள்ளன.
குற்றவாளிகளைப் பரிமாற்றம் செய்வதற்கான சட்டத் திருத்த மசோதாவை ஹாங்காங் நிர்வாகம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொண்டு வந்தது.
இதன்மூலம், ஹாங்காங்கில் குற்ற வழக்குகளில் சிக்குபவர்கள் சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்கப்படுவார்கள். மேலும், இந்தச் சட்டத் திருத்த மசோதாவை எப்படியாவது நிறைவேற்றிட வேண்டும் என்பதில் ஹாங்காங் நிர்வாகத் தலைவர் கேரி லேம் உறுதியாக இருந்தார்.
ஆனால், சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹாங்காங் எதிர்க்கட்சியினரும், பொதுமக்களும் கடும் போராட்டத்தில் இறங்கினர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆயிரக்கணக்கானோர் ஹாங்காங் வீதிகளில் போராட்டத்தில் இறங்கினர். அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். இதனால் ஹாங்காங்கில் பதற்றம் ஏற்பட்டது. உள்நாட்டுக் கலவரம் பெரிதாகும் சூழல் உருவானது.
இதனைத் தொடர்ந்து கைதிகளை சீனாவிடம் ஒப்படைக்கும் சட்டத் திருத்த மசோதா நிறுத்தி வைக்கப்பட்டதாக ஹாங்காங் நிர்வாகத் தலைவர் கேரி லேம் அறிவித்தார். எனினும் குற்றவாளிகளை சீனாவிடம் ஒப்படைக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாவை முழுமையாக ரத்து செய்யுமாறு தொடர்ந்து ஹாங்காங்கில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT