Published : 10 Aug 2019 09:53 AM
Last Updated : 10 Aug 2019 09:53 AM

ரயில் சேவையைத் தொடர்ந்து, டெல்லி- லாகூர் பஸ் போக்குவரத்தையும் ரத்து செய்தது பாகிஸ்தான்

கோப்புப்படம்

இஸ்லாமாபாத்,

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு சலுகைகளை மத்திய அரசு ரத்து செய்து, இரு மாநிலங்களாகப் பிரித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்த பாகிஸ்தான், இருநாடுகளுக்கு இடையிலான ரயில் போக்குவரத்தை முதலில் ரத்து செய்த நிலையில், நேற்று நள்ளிரவு முதல் டெல்லி-லாகூர் இடையிலான நட்புறவு அடிப்படையிலான பஸ் போக்குவரத்தையும் ரத்து செய்தது.

இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவு அடிப்படையிலான பஸ் போக்குவரத்து கடந்த 1999-ம் ஆண்டு மத்தியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலத்தில் தொடங்கப்பட்டது. ஆனால், 2001-ம் ஆண்டு் நாடாளுமன்றத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து நிறுத்தப்பட்டு, 2003-ம் ஆண்டு ஜூலையில் மீண்டும் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு சலுகைகளை மத்திய அரசு ரத்து செய்து, மாநிலத்தை இரண்டாகப் பிரித்து அறிவித்தது. இந்தியாவின் இந்த நடவடிக்கையை பாகிஸ்தான் கடுமையாக எதிர்த்து, ஐ.நா.வுக்குக் கடிதம் எழுதியுள்ளது. மேலும் சர்வதேச சமூகத்தின் உதவியையும் அந்நாடு கோரியுள்ளது.

இந்தியாவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் முதலில் லாகூர்- டெல்லி சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் ரயிலை பாகிஸ்தான் பகுதிக்குள் அனுமதிக்க மறுத்து நிறுத்தியது. அதன்பின் ஜோத்பூர்-கராச்சி இடையேயான தார் எக்ஸ்பிரஸ் ரயிலையும் அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தியது.

இந்நிலையில், அடுத்த கட்டமாக டெல்லி-லாகூர் இடையே சென்று வந்த நட்புறவு அடிப்படையிலான பஸ் போக்குவரத்தையும் நேற்று நள்ளிரவு முதல் பாகிஸ்தான் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தானின் தகவல் தொடர்பு மற்றும் தபால்துறை அமைச்சர் முராத் சயீத் ட்விட்டரில் கூறுகையில், " கடந்த புதன்கிழமை பாகிஸ்தானின் தேசியப் பாதுகாப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில்தான் இந்தியா- பாகிஸ்தான் இடையே செல்லும் ரயில் போக்குவரத்து, பஸ் போக்குவரத்தை ரத்து செய்யும் முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி டெல்லி-லாகூர் இடையிலான பஸ் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டது" எனத் தெரிவித்தார்.

டெல்லியில் உள்ள அம்பேத்கர் அரங்கில் அருகே அதாவது இந்தியா கேட் பகுதியில் இருக்கும் பஸ் நிலையத்தில் இருந்து டெல்லி-லாகூர் இடையே பஸ் சேவை இயக்கப்பட்டு வந்தது. இந்தியாவின் பேருந்துகள் திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் லாகூர் புறப்படும்.

அதேபோல, பாகிஸ்தான் சுற்றுலா கழகப் பேருந்துகள் ஒவ்வொரு செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் டெல்லியில் இருந்து லாகூர் புறப்படும். பாகிஸ்தானில் இருந்து திரும்புபோது, இந்தியாவின் பேருந்துகள் செவ்வாய், வியாழன் சனி ஆகிய கிழமைகளிலும், பாகிஸ்தான் பேருந்துகள் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைளிலும் புறப்படும்.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x