Published : 02 Aug 2019 10:09 AM
Last Updated : 02 Aug 2019 10:09 AM

இந்தியா- பாக், கேட்டுக்கொண்டால் காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம்: அதிபர் ட்ரம்ப் மீண்டும் பேச்சு

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்: கோப்புப்படம்

வாஷிங்டன்

காஷ்மீர் விவகாரத்தில் யாருடைய மத்தியஸ்தம் தேவையில்லை என்று இந்தியா திட்டவட்டமாக கூறியுள்ள நிலையில் மத்தியஸ்தம் செய்ய தயார் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடந்த வாரம் அமெரிக்க பயணம் மேற்கொண்டார். அப்போது, அங்கு  அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை பிரதமர் இம்ரான் கான் சந்தித்துப் பேசினார். அப்போது இருவரும் கூட்டாக நிருபர்களுக்கு  பேட்டி அளிக்கையில், காஷ்மீர் விவகாரத்தில் நீங்கள் மத்தியஸ்தம் செய்ய விருப்பமா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

 அதற்கு பதில் அளித்து அதிபர் ட்ரம்ப் பேசுகையில், "நிச்சயமாக நான் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான காஷ்மீர் பிரச்சினையில் என்னால் உதவ முடியும். இரு நாடுகளும் விரும்பினால், காஷ்மீர் விவகாரத்தில்  மத்தியஸ்தம் செய்யும் நபராக இருக்க விரும்புகிறேன்.
 
சமீபத்தில் ஜப்பானில் ஒசாகாவில் நடந்த ஜி-20 மாநாட்டின்போது, பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினேன். அப்போது, காஷ்மீர் விவகாரம் குறித்து இருவரும் பேசினோம். அப்போது, காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யும் நபராகச் செயல்படமுடியுமா என்று பிரதமர் மோடி என்னிடம் கேட்டார்" எனத் தெரிவித்தார். ஆனால், அதிபர் ட்ரம்ப் கூறிய பேச்சுக்கு இந்திய அரசு மறுப்பு தெரிவித்தது. பிரதமர் மோடி காஷ்மீர் விவகாரத்தில் யாருடைய மத்தியஸ்தையும் கோரவில்லை, காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நாடு தலையீட்டையும் விரும்பவில்லை என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது. 

ஆனால், காஷ்மீர் விவகாரத்தில் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்காவின் தலையீட்டை விரும்புவதாகவும், மத்தியஸ்தம் செய்ய அதிபர் ட்ரம்ப் முன்வந்தால் வரவேற்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்தியாவின் கண்டனத்தைத் தொடர்ந்து காஷ்மீர் விவகாரம் இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சினை என்று அமெரிக்க பின்வாங்கியது.

இந்த  பிரச்சினை முடிந்து 10 நாட்கள் கூட ஆகாத நிலையில் மீண்டும் காஷ்மீர் விவகாரத்தை அதிபர் ட்ரம்ப் எழுப்பியுள்ளார். வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்ப் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, காஷ்மீர் விவகாரத்தில் உங்களுடைய மத்தியஸ்தத்தை இந்தியா ஏற்கவில்லை என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அதிபர் ட்ரம்ப் கூறுகையில், " இது உண்மையில் பிரதமர் நரேந்திர மோடிதான் என் மத்தியஸ்த்தை ஏற்பது குறித்து முடிவு எடுக்க வேண்டும். 

இந்தியப் பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இருவரும் அற்புதமான மனிதர்கள். இரு நாடுகளுக்கு இடையே நீண்ட காலமாக இருக்கும் காஷ்மீர் பிரச்சினையில் யாராவது மத்தியஸ்தம் செய்து உதவினால், இரு நாடுகளும் சிறப்பான தீர்வைப் பெற முடியும். 

இது தொடர்பாக பாகிஸ்தானிடமும், இந்தியாவிடமும் நான் வெளிப்படையாகவே பேசினேன். ஏனென்றால் காஷ்மீர் விவகாரம் என்பது நீண்டகாலமாக இருந்து வருகிறது.

நான் காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண விரும்புகிறேன். இரு நாடுகளும் காஷ்மீர்  பிரச்சினைக்கு என்னை மத்தியஸ்தம் செய்ய அழைத்தால், நான் உறுதியாக தலையிட்டு பிரச்சினைக்கு தீர்வு காண்பேன் " எனத் தெரிவித்தார்.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x