Published : 01 Aug 2019 02:52 PM
Last Updated : 01 Aug 2019 02:52 PM
ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமத் ஜாவத் சாரிஃப் மீது புதிய பொருளாதாரத் தடையை அமெரிக்கா விதித்துள்ளது.
ஈரான் மீது பொருளாதார ரீதியாக பெரும் அழுத்தத்தை அமெரிக்கா தொடர்ந்து கொடுத்து வருகிறது. அந்த வகையில் ஈரான் வெளியுறவு அமைச்சர் ஜாவத் சாரிஃப் மீது அமெரிக்க புதிய பொருளாதாரத் தடையை விதித்திருக்கிறது.
இதுகுறித்து அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்டீபன் கூறும்போது, “ ஈரான் தலைவரது அஜாக்கிரதையான கருத்தாக்கங்களை ஈரான் வெளியுறவு அமைச்சர் செயல்படுத்துகிறார்” என்று தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில் தன் மீதான அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடை குறித்து ஜாபர் சாரிஃப் தனது ட்விட்டர் பக்கத்தில், “அமெரிக்கா என்னை ஒரு அச்சுறுத்தலாக பார்க்கிறது. இது என்னையும், எனது குடும்பத்தையும் பாதிக்க போவதில்லை. எனக்கு ஈரானை தாண்டி மற்ற நாடுகளில் எந்த சொத்தும் கிடையாது” என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் என்றும் ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தம் பைத்தியக்காரத்தனமானது என்றும் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்து வந்தார்.
இந்நிலையில் ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது. மேலும் ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறது. இதில் சவுதி அரேபியாவுக்குச் சொந்தமான எண்ணெய்க் கப்பல்கள் மீது கடந்த மாதம் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈரான்தான் காரணம் என அமெரிக்கா குற்றம் சாட்டியது. ஆனால் ஈரான் இதனை மறுத்து வந்தது.
இவ்வாறு தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வந்த நிலையில் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனால் ஈரான் மீதும் அதன் முக்கியத் தலைவர்கள் மீதும் புதிய பொருளாதாரத் தடையை ட்ரம்ப் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT