Published : 27 Jul 2019 11:28 AM
Last Updated : 27 Jul 2019 11:28 AM

உற்பத்தியை அமெரிக்காவுக்கு மாற்றுங்கள்:  ஆப்பிள் நிறுவனத்துக்கு அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை

ஆப்பிள் சிஇஓ டிம் குக், அதிபர் டொனால்ட் ட்ரம்ப் : கோப்புப்படம்

 

வாஷிங்டன்,
ஆப்பிள் நிறுவத்தின் மேக் ப்ரோ கணினி உற்பத்தியை அமெரிக்காவில் இருந்து சீனாவுக்கு மாற்றினால், கடும் வரிவிதிப்பை எதிர்கொள்ள நேரிடும் என்று ஆப்பிள் நிறுவனத்தின் அதிபர் டிம் குக்குக்கு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் மேக் ப்ரோ கணினியைத் தயாரித்து வெளியிட்டது. இது மிகவும் அதிக விலை கொண்டதாக இருக்கும் வகையில் பல்வேறு அம்சங்கள் கொண்டதாக வடிமைக்கப்பட்டு இருந்தது. 

இந்த மேக்-ப்ரோ கணினிக்குத் தேவையான பொருட்கள் மட்டுமே அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஆஸ்டின் நகரில் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆனால், ஆப்பிள் நிறுவனத்தின் மற்ற பொருட்களான ஐபாட், ஐபோன் உள்ளிட்ட மற்ற பொருட்கள் சீனாவில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே கடந்த ஆண்டில் இருந்து வர்த்தகப் போர் நடந்து வருகிறது. சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 30,000 கோடி டாலர் வரிவிதிப்பை அதிபர் ட்ரம்ப் விதித்தார். இதற்கு பதிலடியாக சீன அதிபர் ஜி ஜின்பிங் அமெரிக்கப் பொருட்களுக்கு 6,000 கோடி டாலர் வரி விதித்தார். சமீபத்தில் இரு நாட்டின் அதிபர்களும் ஜி20 மாநாட்டில் சந்தித்துப் பேசினாலும், வரி விதிப்பில் எந்தவிதமான தளர்வும் செய்யவில்லை. 

இந்த சூழலில், அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் செயல்பட்டுவரும் மேக் ப்ரோ கணினி நிறுவனத்தின் உற்பத்தியை, சீனாவின் ஷாங்காய் நகருக்கு மாற்ற ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக் திட்டமிட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகின. 

ஆப்பிள் நிறுவனத்தின் மேக் ப்ரோ தயாரிப்பை ஷாங்காய் அருகே புதிய தொழிற்சாலையில் தொடங்குவதற்கு ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நாளேடு செய்தி வெளியிட்டு இருந்தது. 

ஏற்கெனவே சீனா மீது கடும் ஆத்திரத்தில் உள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஆப்பிள் நிறுவனத்தின் ஒரே உற்பத்திக் கூடமும் சீனாவுக்கு செல்வதைக் கண்டு கொதித்தார். இதையடுத்து, நேற்று அதிபர் ட்ரம்ப் ட்விட்டர் மூலம் ஆப்பிள் அதிபர் டிம் குக்குக்கு எச்சரிக்கை செய்தி வெளியிட்டார். அதில், " ஆப்பிள் நிறுவனம் அமெரிக்காவின் ஆஸ்டின் நகரில் இருந்து தனது உற்பத்திக் கூடத்தை சீனாவுக்கு மாற்றினால், ஆப்பிள் நிறுவனத்துக்கு வரிச்சலுகை ஏதும் கிடைக்காது. மாறாக கடும் வரிவிதிப்பு இருக்கும். அதேநேரத்தில் அமெரிக்காவில் உற்பத்தி செய்தால், எந்த வரியும் விதிக்கப்படாது" எனத் தெரிவித்தார்.

மேலும், ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்கிடமும் பேசிய அதிபர் ட்ரம்ப், ''சீனாவில் இருக்கும் ஆப்பிள் உற்பத்தியை அமெரிக்காவுக்கு கொண்டுவர வேண்டும்'' என்று வலியுறுத்தியுள்ளார். 

கடந்த ஆண்டு சீன அரசு வரியை உயர்த்தியதால், வேறுவழியின்றி ஆப்பிள் நிறுவனமும் தனதுபொருட்களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்குth தள்ளப்பட்டது. இதனால், ஆப்பிள் உற்பத்தியை வாஷிங்டனுக்கு மாற்றுங்கள் என்று அதிபர் ட்ரம்ப், ஆப்பிள் நிறுவனத்தை வலியுறுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x