Published : 23 Jul 2019 11:26 AM
Last Updated : 23 Jul 2019 11:26 AM

காஷ்மீர் விவகாரம் இந்தியா- பாகிஸ்தான் இடையிலானது: மத்திய அரசு மறுப்பால் பின்வாங்கிய அமெரிக்கா

பிரதமர் மோடியுடன் அதிபர் ட்ரம்ப் : கோப்புப்படம்

 

 

வாஷிங்டன், பிடிஐ

காஷ்மீர் விவகாரத்தில் பிரதமர் மோடி மத்தியஸ்தம் செய்ய கேட்டுக்கொண்டதாக அதிபர் ட்ரம்ப் கூறியிருந்த நிலையில், அதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்திருந்தது.

 

இந்நிலையில், காஷ்மீர் விவகாரம், இந்தியா - பாகிஸ்தான் இரு நாடுகள் தொடர்புடையது, இந்த விஷயத்தை இரு நாடுகளும் அமைதிப் பேச்சு மூலம் அமர்ந்து பேசித் தீர்க்க வேண்டும் என்று அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது.

 

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் 3 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை நேற்று வெள்ளை மாளிகையில் இம்ரான் கான் சந்தித்துப் பேசினார்.

 

அப்போது, இம்ரான் கானிடம் காஷ்மீர் விவகாரம் குறித்துப் பேசிய அதிபர் ட்ரம்ப், "ஜப்பானில் கடந்த இரு வாரங்களுக்கு முன் நடந்த ஜி20 மாநாட்டின்போது, பிரதமர் மோடியிடம் பேசினேன். அப்போது, காஷ்மீர் விவகாரத்தில் நான் மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என பிரதமர் மோடி என்னிடம் கோரிக்கை விடுத்தார்" எனத் தெரிவித்தார்.

 

ஆனால், அதிபர் டிரம்ப்பின் இந்தப் பேச்சுக்கு மறுப்பு தெரிவித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டது. அதில் , "பிரதமர் மோடி, ஒருபோதும் காஷ்மீர் விவகாரத்தில் அதிபர் ட்ரம்ப்பை மத்தியஸ்தம் செய்யக் கேட்கவில்லை. காஷ்மீர் விவகாரத்தில் இரு நாடுகளும் அமைதிப் பேச்சின் மூலமே தீர்வு காண வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது. பாகிஸ்தான் எல்லை கடந்த தீவிரவாதத்தை நிறுத்தும் வரை பேச்சுக்கு இடமில்லை" எனத் தெரிவித்தது.

 

காஷ்மீர் விவகாரத்தில் கருத்து தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும், அதிபர் ட்ரம்ப் மத்தியஸ்தம் செய்ய வேண்டும், காஷ்மீர் விவகாரத்தில் இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படாது என்று வலியுறுத்தியிருந்தார்.

 

இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிபர் ட்ரம்ப் பேச்சுக்கு விளக்கம் அளித்துள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் நிருபர்களிடம் கூறியதாவது:

 

''காஷ்மீர் விவகாரம் என்பது இந்தியா- பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான விஷயம். இதில் இரு நாடுகளும் அமைதிப் பேச்சின் மூலம் அமர்ந்து பேசித் தீர்வு காண வேண்டும் என்பதையே அமெரிக்கா விரும்புகிறது. அதற்குத் தேவையான உதவிகளை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் செய்ய விரும்புகிறார்.

 

பாகிஸ்தான் தனது எல்லைப்பகுதியில் தீவிரவாதிகளுக்கு எதிராக நிலையான, மாற்றமில்லாத நடவடிக்கைகளை எடுக்கும் பட்சத்தில் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான பேச்சு வெற்றிகரமாகத் தொடங்கும் என்று நாங்கள் நம்புகிறோம். சர்வதேச நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டு, பிரதமர் இம்ரான் கான் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார் என்று நம்புகிறோம்.

 

இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றமான சூழல் குறைவதற்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவு தெரிவிப்போம். பேச்சுவார்த்தைக்கு ஏதுவான சூழல் உருவாக நாங்கள் உதவியாக இருப்போம். எங்களின் முதல் மற்றும் முக்கியத்துவம் தீவிரவாதத்தை எதிர்ப்பதாகும். இதைத்தான் அதிபர் ட்ரம்ப்பும் வரவேற்று கருத்து தெரிவித்துள்ளார்''.

 

இவ்வாறு செய்தி்த் தொடர்பாளர் தெரிவித்தார்.

 

வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் நிருபரிடம் கூறுகையில், "காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என்று எங்களிடம் கேட்டுக்கொண்டால், நாங்கள் உதவத் தயார். அதைத்தான் அதிபர் ட்ரம்ப் தெளிவுபடுத்தியுள்ளார்" எனத் தெரிவித்தார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x