Published : 10 May 2014 10:00 AM
Last Updated : 10 May 2014 10:00 AM

கார் விற்பனை கடும் சரிவு

கார் விற்பனை நடப்பு நிதி ஆண்டின் முதல் மாதத்திலேயே (ஏப்ரல்) கடும் சரிவைச் சந்தித்துள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவாக கார் விற்பனை 10.15 சதவீதம் சரிந்துள்ளது. கார் விற்பனையை ஊக்குவிக்க மத்திய அரசு உற்பத்தி வரியைக் குறைத்தது. இதனால் நிறுவனங்களும் கார்களின் விலையைக் குறைத்தன. இருப்பினும் கார் விற்பனை கடும் சரிவைச் சந்தித்துள்ளது.

இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சங்கம் (எஸ்ஐஏஎம்) வெளியிட்டுள்ள அறிக்கையில் ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 1,35,433 கார்கள் விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் மொத்தம் 1,50,737 கார்கள் விற்பனையாயின.

2013 மே மாதத்துக்குப் பிறகு இப்போதுதான் கடும் சரிவை சந்தித்துள்ளது. அப்போது 11.7 சதவீத அளவுக்கு விற்பனை குறைந்ததாக எஸ்ஐஏஎம் டைரக்டர் ஜெனரல் சுகதோ சென் தெரிவித்தார்.

மத்தியில் புதிய அரசு பொறுப்பேற்று ஆட்டோமொபைல் துறை ஊக்குவிப்புக்கான நடவடிக்கைகளை எடுக்கும்போதுதான் விற்பனை அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது என்று அவர் கூறினார். இப்போதுள்ள 4 சதவீதம் முதல் 5 சதவீதம் வரையிலான வளர்ச்சி கார் விற்பனை அதிகரிப்பதற்குப் போதுமானதல்ல என்று குறிப்பிட்ட அவர், குறைந்தபட்சம் 7 சதவீத அளவை எட்டும்போதுதான் விற்பனை அதிகரிக்கும் என்று சுட்டிக் காட்டினார்.

கடனுக்கான வட்டி அதிகரிப்பு மற்றும் எரிபொருள் விலை உயர்வு ஆகியன கார் விற்பனையை தொடர்ந்து பாதித்து வருகிறது என்ற அவர், உற்பத்தி வரி குறைப்புக்குப் பிறகு கார்களின் விலை கணிசமாகக் குறைக்கப்பட்டது. ஆனாலும் விற்பனை அதிகரிக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

ஏற்றம் பெற்ற 2 சக்கர வாகன விற்பனை

கார்களின் விற்பனை சரிந்த போதிலும் இரு சக்கர வாகன விற்பனை 11.67 சதவீதம் அதிகரித்து 13,04,447 ஆக உயர்ந்தது. முந்தைய ஆண்டு இதே காலகட்டத்தில் விற்பனை 11,68,100 ஆக இருந்தது. ஆட்டோ விற்பனை 2.17 சதவீதம் குறைந்து 33,602 ஆக இருந்தது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் விற்பனை 34,348 ஆக இருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x