Published : 04 May 2014 10:19 AM
Last Updated : 04 May 2014 10:19 AM
உக்ரைனின் கிழக்குப் பகுதியில் சிறை பிடிக்கப்பட்டிருந்த ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அமைப்பின் பிரதி நிதிகளை ரஷ்ய ஆதரவு படையினர் சனிக்கிழமை விடு வித்தனர்.
சமீபத்தில் உக்ரைனின் கிரைமியா பகுதியை ரஷ்யா தன் னுடன் இணைத்துக் கொண்டது. தற்போது உக்ரைனின் கிழக்குப் பகுதியில் பிரிவினை கோரி போராட்டம் நடத்தும் ரஷ்ய ஆதரவுப் பெற்ற ஆயுதம் தாங்கிய போராட்டக்காரர்கள் அப்பகுதியில் உள்ள நகரங் களை கைப்பற்றி வருகின்றனர்.
இதற்கிடையே, உக்ரைன் நிலைமையை ஆராய்வதற்காக ராணுவ கண்காணிப்பாளர்களை ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அமைப்பு (ஓ.எஸ்.சி.இ) அனுப்பிவைத்தது. கடந்த ஏப்ரல் 25-ம் தேதி ஸ்லாவ்யான்க் நகரில் அவர்களை அரசு எதிர்ப்புப் படையினர் கைது செய்து சிறை வைத்தனர். அவர் களை விடுவிக்க வேண்டும் என்று மேற்கத்திய நாடுகள் கோரிக்கை விடுத்து வந்தன.
இந்நிலையில், தங்களின் அமைப்பைச் சேர்ந்த 7 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாக ஓ.எஸ்.சி.இ. அமைப்பு அறிவித்துள்ளது.
ஆக்கிரமிப்பாளர்களிட மிருந்து நிலப்பகுதிகளை மீட்க உக்ரைன் ராணுவம் தீவிரமான தாக்குதலை தொடங்கியுள்ள நிலையில், இந்த 7 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஸ்லாவ் யான்ஸ்க் நகரில் ராணுவம் நடத்திய தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர்.
இது தொடர்பாக உக்ரைன் உள்துறை அமைச்சர் ஆர்சென் அபாகோவ் கூறுகையில், “நகரங்களை மீட்க ராணுவத் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளோம். இலக்கை அடையும் வரை ராணுவ நடவடிக்கையை நிறுத்த மாட்டோம்” என்றார்.
ராணுவம் மட்டுமல்லாது, தேசத்தின் ஒற்றுமையை வலியுறுத்தும் அரசு ஆதரவா ளர்களுக்கும், ரஷ்ய ஆதரவு பெற்ற ஆக்கிரமிப் பாளர்களுக்கும் இடையே நாட்டின் கிழக்குப் பகுதியில் மோதல் நிகழ்ந்து வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் வன்முறை வெடித் துள்ளது. ஓடெஸா நகரில் உள்ள கட்டடம் ஒன்றில் தீ வைக்கப்பட்டதில் 30 பேர் உயிரிழந்தனர்.
பான் கி-மூன் வேண்டுகோள்
உக்ரைனில் நிலைமை மோசமடைந்து வருவதை யடுத்து, அது குறித்து விவாதிக்க அமெரிக்காவின் நியூயார்க்கில் செயல்படும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டத்துக்கு வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இக்கூட்டத்தில் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி-மூனின் அறிக்கை வாசிக்கப்பட்டது. அதில் அவர் கூறியிருந்ததாவது: “மோதலில் ஈடுபடும் அனைத்துத் தரப்பினரும் வன்முறையை கைவிட்டு கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும். உக்ரைன் நாட்டின் இறையாண்மைக்கும், ஒற்றுமைக்கும் மதிப்பளித்து அனைத்துத் தரப்பினரும் செயல்பட வேண்டும். ராஜ்ஜிய ரீதியில் பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிக்க வேண்டும்.
ஐ.நா. துணைப் பொதுச் செயலாளர் (அரசியல் விவகாரம்) ஜெப்ரி பெல்ட்மென், உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் அடுத்த வாரம் செல்வார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா எச்சரிக்கை
இதற்கிடையே அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் சக் ஹெகல், வாஷிங்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசுகையில், “அமெரிக்கா உள்ளிட்ட 28 நாடுகள் உறுப்பினர் களாக உள்ள நேட்டோ அமைப்பின் படைத் திறனை சோதித்துப் பார்க்க ரஷ்யா விரும்புகிறது போலும். ரஷ்ய அச்சுறுத்தலை எதிர்கொள்ள வசதியாக, நேட்டோ படையை பலப்படுத்த உறுப்பு நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். உக்ரைனில் ரஷ்ய அரசின் தலையீட்டை நேட்டோ படை தடுக்கும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT