Published : 09 May 2014 11:46 AM
Last Updated : 09 May 2014 11:46 AM
இந்திய மீனவர்களைச் சுட்டுக் கொன்ற இத்தாலி கடற்படை வீரர்கள் மீது இந்தியாவில் வழக்கு நடைபெறுவது தொடர் பாக, ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனின் இத்தாலிய சுற்றுப்பயணத்தின்போது விவாதிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஐ.நா. பொதுச்செயலாளரின் உதவி செய்தித் தொடர்பாளர் வன்னினா மேஸ்ட்ராக்கி கூறுகையில், “ரோமில் கடந்த புதன்கிழமை இத்தாலி அதிகாரிகளை ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் சந்தித்தார். அப்போது நடை பெற்ற விவாதத்தில், இந்திய மீனவர்களைச் சுட்டுக் கொன்ற இத்தாலிய கடற்படை வீரர்கள் வழக்கை எதிர்கொண்டுள்ளது குறித்தும் விவாதிக்கப்பட்டது” எனத் தெரித்தார்.
அவ்விவாதத்தின் முழு விவரங் களையும் தெரிவிக்க செய்தித் தொடர்பாளர் மறுத்து விட்டார். இத்தாலி சென்றுள்ள பான் கி- மூன், அந்நாட்டு அதிபர் ஜியார் ஜியோ நபோலிடனோ, பிரதமர் மாட்டியோ ரென்ஸி, செனட் தலைவர் பியட்ரோ கிராஸ்ஸோ ஆகியோரை புதன்கிழமை சந்தித்தார். இத்தாலி கடற்படை வீரர்கள் பிரச்சினை தீர்க்கப்படாமல் இருப்பதால், அதனை சர்வதேச கவனத்துக்கு இத்தாலி கொண்டு சென்றுள்ளது.
இது தொடர்பாக, ஐ.நா. போன்ற சர்வதேச தீர்ப்பாயத்தின் மூலம் பிரச்சினைக்கு முடிவு காண, இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என இந்தியாவுக்கு இத்தாலி கடிதம் எழுதியுள்ளது.
கடந்த 2012-ம் ஆண்டு கேரள கடலோரப் பகுதியில் இரு மீனவர்களை இத்தாலிய கடற்படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர். கொள்ளையர்கள் எனத் தவறுதலாக நினைத்துச் சுட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக இத்தாலிக் கடற்படை வீரர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர் களை நாடு திரும்ப அனுமதிக்கும் படியும், வழக்குகளை முற்றிலும் கைவிடும்படியும் இத்தாலி கோரிக்கை விடுத்தது.
இப்பிரச்சினை இருநாடுகளின் தூதரக உறவில் விரிசலை ஏற்படுத்தியது. கடற்படை வீரர்கள் மீதான விசாரணை இத்தாலியில் நடைபெற வேண்டும் என அந்நாட்டு அரசு விரும்புகிறது. ஆனால், வழக்கை விசாரிக்கும் உரிமை இந்தியாவுக்குத்தான் உள்ளது என இந்தியா உறுதியாகத் தெரிவித்து வருகிறது.
ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி- மூனை வரவேற்கும் இத்தாலி பிரதமர் மாட்டியோ ரென்ஸி. படம்: ஏ.எப்.பி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT