Published : 31 May 2014 10:00 AM
Last Updated : 31 May 2014 10:00 AM
பங்குச்சந்தையில் முதலீடு செய்து லாபம் ஈட்டித் தருவதாகக் கூறி முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.65 கோடிக்கும் அதிகமான தொகையைப் பெற்றுக்கொண்டு, அதை முறைகேடாக பயன்படுத்தி யதாக இந்தியர் ஒருவர் மீது அமெரிக்காவின் மாவட்ட நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.
இதே நபர் மீது அமெரிக்க பங்கு பரிவர்த்தனை ஆணையமும் (எஸ்இசி) இதுபோன்ற வழக்கு தொடுத்து அவரது சொத்தை முடக்கி வைக்க நீதிமன்ற உத்தர வைப் பெற்றுள்ளது. இவர் மீதான குற்றச்சாட்டு நிரூபணமானால் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் ரூ.1.47 கோடி அபராதமும் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியரான நீல் கோயல் (33), பங்குச் சந்தையில் மூதலீடு செய்து லாபம் ஈட்டி தருவதாகக் கூறி, கடந்த 2006 முதல் 41 பேரிடம் ரூ.65 கோடிக்கும் அதிகமான தொகையை வசூலித்துள்ளார்.
ஆனால் இவரது முதலீட்டுத் திட்டம் தோல்வியடைந்து நஷ்டமடைந்தபோதிலும் அதை மறைத்து, லாபம் ஈட்டுவதைப் போல போலியான கணக்கு வழக்குகளை முதலீட்டாளர்களிடம் காட்டி ஏமாற்றி உள்ளார் என கோயலுக்கு எதிரான மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, கோயலின் சொத்துகளை முடக்குவதுடன் முதலீட்டாளர்களிடம் வசூலித்த தொகையை வட்டியுடன் திருப்பிக் கொடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் தொடர்ந்து கோயல் முதலீடு திரட்ட தடை விதிக்க வேண்டும் என்றும் எஸ்இசி நீதிமன்றத்தில் கோரியிருந்தது. இதையடுத்து, கோயல் முதலீடு திரட்ட நிரந்தர தடை விதித்ததுடன் அவரது நிறுவன சொத்துகளை முடக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து எஸ்இசியின் சிகாகோ மண்டல அலுவலக இயக்குநர் டேவிட் குளோக்னர் கூறுகையில், "முதலீட்டாளர்களிடமிருந்து வசூலித்த தொகையை வைத்துக் கொண்டு கோயல் ஆடம்பர வாழ்க்கை நடத்தி உள்ளார். 2 வீடுகளை வாங்குவதற்கு முன்பணம் செலுத்தியுள்ளார்" என்றார்.
மற்றொரு இந்தியர்
அமெரிக்காவில் வசித்து வரும் மற்றொரு இந்தியரான ராஜேஷ் படேல் (55) மீது அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. முதலீட்டு மோசடி மற்றும் சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக இவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இரு ஓட்டல்களை வாங்கப் போவதாகவும் அதில் பங்குதாரராக சேர்த்துக் கொள்வதாகவும் கூறி ஒரு முதலீட்டாளரிடமிருந்து ரூ.3 கோடி வாங்கி உள்ளார். பின்னர் மீண்டும் மற்றொரு ஓட்டலை வாங்கப்போவதாகக் கூறி அதே முதலீட்டாளரிடம் ரூ.4.5 கோடி வாங்கி உள்ளார்.
ஆனால் அவர் சொன்னபடி எந்த ஓட்டலையும் வாங்கவில்லை. தனது கடனை அடைத்துவிட்டு மீதி பணத்தை அவர் முறைகேடாக பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது நிரூபிக்கப்பட்டால் படேலுக்கு அதிகபட்சமாக ஒவ்வொரு குற்றச் சாட்டுக்கும் தலா 10 ஆண்டுகள் வீதம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும். இதுதவிர அபராதமும் விதிக்கப்படும் எனத் தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT