Published : 25 Apr 2014 08:49 AM
Last Updated : 25 Apr 2014 08:49 AM

ஆப்கானிஸ்தானில் 3 அமெரிக்கர்கள் கொலை: மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு

காபூலில் அமெரிக்கத் தொண்டு நிறுவனம் நடத்தி வரும் மருத்துவ மனை ஒன்றில் ஆப்கானிஸ்தான் காவல்துறை அதிகாரி நடத்திய தாக்குதலில் 3 அமெரிக்கர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1998-ம் ஆண்டு பெனிஸில் வேனியாவில் தொடங்கப்பட்டது 'க்யூர் இன்டர்நேஷனல்' எனும் தொண்டு நிறுவனம். 29 நாடுகளில் பணியாற்றி வரும் இந்த நிறுவனம் கடந்த 2005-ம் ஆண்டு ஆப்கானிஸ் தான் அரசின் வேண்டுகோளுக் கிணங்க காபூலில் மருத்துவ மனையை நடத்தி வருகிறது.

சம்பவ தினத்தன்று இந்த மருத்துவமனையிலுள்ள வெளிநாட்டவர் மீது ஆப்கன் காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இதில் மருத்துவர் ஒருவர் உட்பட மூன்று அமெரிக்கர்கள் மரணமடைந்தனர்; ஒருவர் பலத்த காயமடைந்தார்.

துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட அந்தக் காவலரை இன்னொரு காவலர் சுட, அவர் காயமடைந்தார். தாக்குதல் நடத்திய காவலர் கைது செய்யப்பட்டார்.

துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

கடந்த சில மாதங்களாகவே காபூலில் நடந்து வரும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அங்கு மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன. அதிலும் குறிப்பாக இந்த வருடம் முழுக்க, வெளிநாட்டினரையே குறி வைத்து துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்து வருகின்றன.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, லெபனீஸ் உணவு விடுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் சுவீடன் நாட்டு வானொலி செய்தியாளர் ஒருவர் உட்பட 21 பேர் கொல்லப்பட்டனர்.

கடந்த மாதம் கண்ணிவெடிகளுக்கு எதிரான தொண்டு நிறுவனமான 'ரூட்ஸ் ஆஃப் பீஸ்' அமைப்பினர் தங்கியிருந்த விருந்தினர் மாளிகையில், தலிபான்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண் குழந்தை உட்பட இருவர் கொல்லப்பட்டனர்.

இந்த மாதம் அதிபர் தேர்தலின் போது அசோஸியேடட் பிரஸ் செய்தி நிறுவனத்தின் புகைப்படக்காரர் அன்ஜா நீட்ரிங்காஸ் ஆப்கன் காவலர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x