Published : 01 Jul 2017 08:30 AM
Last Updated : 01 Jul 2017 08:30 AM
பிரிட்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 11 வயது சிறுவன், நுண்ணறிவு போட்டியில் (ஐக்யூ) 162 புள்ளிகளைப் பெற்று உலகிலேயே அதிக அறிவு திறன்மிக்க விஞ்ஞானிகளான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங் ஆகியோரைப் பின்னுக்குத் தள்ளினான். இதன்மூலம் உலகின் அதிக அறிவுக் கூர்மை பெற்ற முதல் சிறுவனாக விளங்குகிறான்.
தெற்கு பிரிட்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் அர்னவ் சர்மா (11). இவர் ‘மென்சா’ எனும் நுண்ணறிவுத் திறன் (ஐக்யூ) போட்டியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கலந்து கொண்டார். மிகவும் கடினமான இந்தத் தேர்வில் மொத்தம் 8 பேர் பங்கேற்றனர். எந்தவிதமான கேள்விகள் இடம்பெறும் என்பது கூட தெரியாமல், எந்தமுன் தயாரிப்பும் இல்லாமலும் இந்தத் தேர்வில் அர்னவ் சர்மா கலந்து கொண்டார்.
ஆனால் வாய்மொழியாகவும், எழுத்துத் திறன் அடிப்படையிலும் கேட்கப்பட்ட கேள்விகளுக்குச் சரியான பதிலை அளித்து, மொத்தம் 162 புள்ளிகளுடன் வெற்றி பெற்றுள்ளார். இது உலகிலேயே அதிக அறிவுக் கூர்மை மிக்க விஞ்ஞானிகளான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (160 புள்ளி), ஸ்டீபன் ஹாக்கிங் ஆகியோரை விட அதிகமாகும்.
இதுபற்றி அர்னவ் சர்மா கூறும் போது, ‘‘சால்வேஷன் மையத்தில் நடைபெற்ற தேர்வில் சுமார் 2.30 மணி நேரம் பங்கேற்றேன். இதில் குழந்தைகள், இளைஞர்கள் உட்பட 8 பேர் கலந்து கொண்ட னர். நான் தேர்வுக்கு எந்தவிதமான முன் தயாரிப்புகளும் மேற் கொள்ளவில்லை. அதேநேரம் தேர்வு பயமும் எனக்கு அப்போது இல்லை. இந்தத் தேர்வு மிகவும் கடினமானது. இதில் எளிதில் தேர்ச்சி பெற முடியாது. நான் தேர்வில் வெற்றி பெற்றதை எனது குடும்பத்தினரிடம் கூறியபோது அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்’’ என்றார்.
தனது மகனின் அதீத திறமை பற்றி தாய் மீஷா தமீஷா சர்மா கூறுகையில், ‘‘அர்னவ் சர்மாவுக்கு ஒன்றரை வயது இருக்கும்போது தாத்தா, பாட்டியைப் பார்ப்பதற்காக அவனை இந்தியாவுக்கு அழைத் துச் சென்றேன். அப்போதே அவ னது பாட்டி அர்னவ் சர்மா நன்றாக படிப்பான் எனக் கூறினார். இரண் டரை வயதிலேயே கணக்கில் சிறந்து விளங்கினான்’’ என்றார்.
நுண்ணறிவுத் திறன் போட்டியில் சாதனை படைத்துள்ள அர்னவ் சர்மா பற்றி மென்சா தேர்வு மையத்தின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, ‘இவர் பெற்றிருப்பது மிகவும் அதிக மதிப்பெண் ஆகும். உலகில் உள்ள வெகுசிலரே இதனைச் சாதிக்க முடியும்’ என்றார்.
‘மென்சா நுண்ணறிவு சொசைட்டி’ கடந்த 1946-ம் ஆண்டு லண்டன் ஆக்ஸ்போர்டில் விஞ்ஞானி லேன்ஸ்லாட் லயோனல் வேர் மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வழக்கறிஞர் ரோலாண்ட் பெரில் ஆகியோரால் தொடங்கப்பட்டது. தற்போது உலகம் முழுவதும் பரந்து விரிந்து உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT