Published : 07 Dec 2013 12:00 AM
Last Updated : 07 Dec 2013 12:00 AM
இந்தியாவில் நாம் வாழும் காலத்தில் விடுதலைச் சிந்தனை மற்றும் அறஉணர்ச்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு ஆளுமையைப் பார்க்கும் வாய்ப்பு நமக்கு ஏற்படவில்லை. மகாத்மா காந்தியும் அவரது விழுமியங்களும் நம்மில் பெரும்பாலானவர்களின் நினைவாகவே இந்தியாவில் இன்று மிஞ்சியுள்ளது. ஆனால் காந்தியின் விழுமியங்களைப் பிரதிபலிக்கும் ஒருவரின் போராட்டத்தை நாம் வாழும் காலத்திலேயே பார்க்கும் வாய்ப்பு, தென் ஆப்ரிக்க விடுதலை இயக்கத் தலைவர் நெல்சன் மண்டேலா மூலமாகக் கிடைத்தது. நாயகர்கள் அறுகிவரும் உலகில், அமைதிவழிப் போராட்டத்தின் அடையாளமாக வாழ்ந்து மறைந்திருக்கும் நெல்சன் மண்டேலாவுக்கு நம் வணக்கம் என்றைக்கும் உரியது.
மண்டேலாவின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகள் மகத்தான திருப்பங்களைக் கொண்டவை. தென் ஆப்ரிக்காவில் நிலவிய நிறவெறி மற்றும் பூர்வகுடி மக்களுக்கு எதிராக வெள்ளை ஏகாதிபத்தியத்தால் நடத்தப்பட்ட ஒடுக்குமுறைகளுக்கு எதிரான நீண்ட போராட்ட வாழ்க்கை அவருடையது. 27 ஆண்டுகள் சிறை, விடுதலை, நிறவெறிக்கு முடிவு கண்டது என வண்ணமயமான பக்கங்களைக் கொண்டது அவர் வாழ்வு. அரசியல் சார்ந்து அவரது நம்பிக்கைகள் மற்றும் கொண்டிருந்த தத்துவத்தில் ஏற்பட்ட மாற்றங்களும் சுவாரசியமானவை. ஆயுதம் சார்ந்த அரசியல் போராட்டத்திலிருந்து அகிம்சையை நோக்கி அவர் திரும்பியது முக்கியமான உதாரணம். உலகிலேயே கொடுங்கோன்மைக்குப் பெயர்பெற்ற ஒரு அரசாங்கத்தால் அவர் சிறையில் தள்ளப்பட்டார். ஆனால் வெறுப்பின் சிறுநிழல்கூட இல்லாமல் சிறையிலிருந்து அவர் வெளியே வந்தார். அவரை சித்ரவதை செய்தவர்களுக்கு சமாதானப் புன்னகையையே பதிலாக அளித்தார். மண்டேலாவின் அரசியல் வெற்றிகளுக்கு இணையானது அவர் தன் ஆளுமைக்குள்ளேயே நிகழ்த்திய பயணம்.
ஜனநாயகம் என்னும் அடையாளத்தில், சின்னச் சின்ன சர்வாதிகாரிகள் இன்று இந்தியாவை ஆட்சிசெய்கின்றனர். உலகமயமாதலால் ஏழைகளுக்கும், செல்வந்தர்களுக்கும் இடையில் பெரும் இடைவெளி உருவாகி யுள்ளது. இயற்கை வளங்கள் அனைத்தையும் தனியார்மயமாதல் என்ற பெயரில் பெரு நிறுவனங்கள் ஒட்டச்சுரண்டி, அந்த நிலங்களின் பூர்வகுடிகள் ஒவ்வொரு நாளும் ஒவ்வோர் மூலைக்கும் துரத்தப்படும் காட்சியை வளர்ச்சி என்ற பெயரில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். மனதை மரத்துப் போகச் செய்யும் இரட்டை வேடங்கள், போலித்தனங்கள் பெருகிப் போன காலம் இது. இரண்டும்கெட்டான் தன்மை, ஊழல் மற்றும் அடிப்படை விழுமியங்களின் இழப்புதான் நம்முடைய அன்றாடமாக உள்ளது. ஆனால் நமது அமைப்பில், நமது அரசியலில், நமது அகவாழ்க்கையில் இன்னும் மாற்றம் நிகழ்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பதன் உதாரணமாக மண்டேலாவின் ஆளுமை உள்ளது.
மண்டேலாவால்கூட தென் ஆப்ரிக்காவின் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்க முடிய வில்லை. இந்தியச் சமூகத்தைவிட மோசமாகத் துண்டாடப்பட்டிருந்த ஒரு சமூகத்தை அவரால் கொஞ்சம் சீர்படுத்த முடிந்தது. அங்கு நிலவிய நிறவெறிக் கொடுமையை ஒரு கொள்கை என்னும் அளவில் அவரால் ஒழிக்க முடிந்தது. ஆனாலும் அதற்கு பின்விளைவுகள் இல்லாமல் இல்லை. தென் ஆப்ரிக்காவின் கனிம வளம், உலக நாடுகளால் மோசமாகக் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. தென் ஆப்ரிக்காவை வேகமாகத் தாக்கும் எய்ட்ஸ் நோய்க்கு மண்டேலாவின் மகன்களில் ஒருவரே தப்பவில்லை. காலனியத்தின் ஆழமான தழும்பைப் பெற்றிருக்கும் தென் ஆப்ரிக்காவுக்கு மண்டேலா என்ற மகத்தான தலைவரால்கூட முழுமையான விடிவை அளிக்க முடியவில்லை.
மண்டேலா ஒரு கம்யூனிஸ்ட் அல்ல. ஆனால் தென் ஆப்ரிக்க கம்யூனிஸ்ட் கட்சி, வகுப்புப் போராட்டம் மற்றும் சமத்துவம் பற்றிய நுண்ணுணர்வு கொண்ட ஒரு தலைவர் அவரைவிட வேறு யாரும் இல்லை என்பதை உணர்ந்திருந்தது. அதனால்தான் உலகம் மண்டேலாவை ஒரு ஆசிரியனாக, ‘மடிபா’ என்று அன்புடன் அழைக்கிறது.
1918-ம் ஆண்டு தென் ஆப்ரிக்காவில் உள்ள குலு கிராமத்தில் நெல்சன் மண்டேலா பிறந்தார். இவரது தந்தை சோசா பழங்குடி இனத்தலைவராக இருந்தவர். இவரது தந்தைக்கு நான்கு மனைவிகள். 4 ஆண்கள் மற்றும் 9 பெண் குழந்தைகள் சேர்ந்து 13 குழந்தைகள். அவரது மூன்றாவது மனைவிக்குப் பிள்ளையாகப் பிறந்தவர்தான் மண்டேலா. இவரது முழுப்பெயர் நெல்சன் ரோலிஹ்லாலா மண்டேலா. சிறுவயதில் நல்ல குத்துச் சண்டை வீரராக அறியப்பெற்றவர். ரோலிஹ்லாலா என்ற பெயரின் அர்த்தம் மரக்கிளைகளை உலுக்குபவன் அல்லது கலகக்காரன். மண்டேலாவின் ஆளுமைக்குள் ஒரு குத்துச் சண்டை வீரனும், சிறந்த வழக்கறிஞரும் உண்டு. எப்போது முன்னேறிச் செல்வது, எப்போது பதுங்குவது, எப்போது விலகுவது என்று தெரியும். எதிரியை ஆச்சரியப்படுத்தும் முக்கியத்துவத்தையும் உணந்தவர் அவர். அவரது தனிப்பட்ட, அரசியல் நடத்தைகள் மிகவும் தைரியமானவை. தார்மீக நெறிகள் கொண்டவை.
மண்டேலா தனது அரசியலில் சாதுர்யத்தையும், தந்திரோபாயங்களையும், கருத்தியல் கலப்புகளையும் கையாள வேண்டி வந்தது. 1990களின் முதல் ஐந்து ஆண்டுகள் தன் மீதான நம்பிக்கையை முதலில் உருவாக்க வேண்டியிருந்தது. தனது முக்கூட்டணிக்கே ஆபத்தாக வரக்கூடிய ஒரு இணைப்பிலும் மண்டேலாவின் தேசிய ஒற்றுமைக்கான அரசு ஈடுபட வேண்டியிருந்தது. நிறவெறி அரசாங்கத்தை நடத்திய தேசியக் கட்சியோடும் மண்டேலா உறவை ஏற்படுத்தினார். ஆச்சரியங்களுக்கு மேல் ஆச்சரியங்கள் நிகழ்ந்தன. தென் ஆப்ரிக்காவின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நெல்சன் மண்டேலா, முன்பு அதிபராக இருந்த டி கிளார்க்கைத் துணை அதிபராகப் பணியாற்ற அழைத்தார். அதை டி கிளார்க்கும் ஏற்றுக்கொண்டார்.
அடுத்து க்வாசலு நடாலில் ஆதிக்கம் செலுத்திய இன்கதா சுதந்திரக் கட்சியை நோக்கித் தனது கவனத்தைத் திருப்பினார் மண்டேலா. முதலில் மண்டேலாவின் கூட்டணியுடன் இணைய மறுத்த அக்கட்சியின் தலைவர் புத்தெலிசி, கிளார்க்குடன் சேர்ந்து இன்னொரு துணை அதிபராகப் பதவியேற்றார்.
தென் ஆப்ரிக்காவில் பரவலா கவும், சக்தி வாய்ந்த சமூகமாகவும் இருந்த புலம்பெயர்ந்த இந்தியர்களையும் மண்டேலா தனது அமைச்சரவையில் இணைத்தார். தென் ஆப்ரிக்க இந்தியர்கள் நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட மகாத்மாவின் மகன் மணிலால் காந்தி, மோண்டி நாய்க்கர், யூசுப் தாது ஆகியோர் முக்கியமானவர்கள். இந்தியர்களின் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாக அமைச்சரவையில் இடம் பெற்றிருந்ததாக விமர்சனம் எழுந்தது. நிறவெறிக்கு எதிரான அவர்களது போராட்டப் பங்களிப்பின் அளவுக்கே இடம் அளிக்கப்பட்டுள்ளது என்று அமைதியாக பதிலளித்தார் மண்டேலா. லட்சியவாதமும் நடை முறையும் எதிரெதிர் திசையில் நிற்கும் காலம் இது. நெறிகளும், அரசியல் முடிவுகளும் ஒன்றையொன்று சந்திக்க முடியாத சூழலில் நாம் வாழ்கிறோம். நல்ல தன்மை என்பது பலவீனமான பண்பாக மாறிவரும் நேரத்தில் வித்தியாசமான உதாரணமாகத் திகழ்ந்தவர் மண்டேலா.
செயலே சிறந்த சொல் என்பதை நிரூபித்த காந்தியைப் போலவே மண்டேலாவும் வாழ்ந்திருக்கிறார். 27 ஆண்டுக் காலச் சிறைவாசத்தையும் புன்சிரிப்போடு ஏற்றுக்கொண்டு வருங்காலத்தை நம்பிக்கையோடு எதிர்கொள்ள முடியும் என்பதைக் காட்டினார். பகைவரையும் உள்ளடக்கிய போர் முறையை வளர்த்தெடுத்தார். கசப்பற்ற, குரோத மற்ற, ரத்தம் சிந்தாத வெற்றி சாத்தியம் என்பதைக் காட்டியிருக்கிறார். உலகிற்கு மண்டேலாவின் மிகப் பெரிய கொடை இதுதான்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT