Published : 16 Mar 2014 11:46 AM
Last Updated : 16 Mar 2014 11:46 AM
ருவாண்டாவில் 1994-ல் நடந்த இனப்படுகொலையில் தொடர்பு டைய அந்நாட்டின் உளவுத் துறை முன்னாள் தலைவர் பாஸ்கல் சிம்பிகாங்வாவுக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து பிரான்ஸ் நீதிமன்றம் வெள்ளிக் கிழமை தீர்ப்பு வழங்கியது.
ருவாண்டாவில் 1994-ல் நடந்த இனப்படுகொலையில் 5 லட்சத் துக்கும் மேற்பட்டோர் உயிரிழந் தனர். 1994-ல் ருவாண்டா அதிபர் ஜுவனல் ஹபியரிமனா, அண்டை நாடான புரூண்டியின் அதிபர் நிடரிமிரா ஆகிய இருவரும் பயணம் செய்த விமானம் ருவாண்டா தலைநகர் கிகாலியின் தரையிறங்கும் போது, எதிரிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
இதையடுத்து அந்நாட்டின் துட்சிஸ் இன மக்களுக்கு எதிராக வன்முறை வெடித்தது. இதில் துட்சிஸ் இன மக்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவான ஹுட்டு மிதவாத மக்கள் என 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதற்கு அரசு உயரதிகாரிகள் பலர் உடந்தை யாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் இந்தியப் பெருங்கடலில் உள்ள பிரான்ஸ் நாட்டுக்கு சொந்தமான மயோட்டி தீவில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த, முன்னாள் ருவாண்டா அதிபரின் உறவினர் பாஸ்கல் சிம்பிகாங்வா 2008-ல் கைது செய்யப்பட்டார்.
ருவாண்டாவில் 1994-ல் நடந்த இனப் படுகொலையின்போது சிம்பிகாங்வா அந்நாட்டு அதிப ரின் காவல் படை மற்றும் உளவுத் துறை தலைவராக இருந்தார். இவர் ஹுட்டு இன தீவிரவாத குழுக்களுக்கு ஆயுதங்களை வழங்கி, படுகொலைக்கு தூண்டி னார் என்ற குற்றசாட்டு இருந்தது.
இது தொடர்பாக பிரான்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டு விசாரணை நடைபெற்றது. இதில் சிம்பிகாங்வா தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார்.
இந்நிலையில் 6 வார கால தொடர் விசாரணைக்குப் பிறகு பிரான்ஸ் நீதிமன்றம் சிம்பி காங்வாவுக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கியது.
இந்நிலையில் இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக சிம்பிகாங்வாவின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
1986-ல் நடந்த கார் விபத்தில் தண்டுவட பாதிப்பால் இடுப்புக்கு கீழே செயலிழந்ததால், சிம்பி காங்வா சக்கர நாற்காலியை பயன்படுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT