Published : 18 Jul 2014 08:04 PM
Last Updated : 18 Jul 2014 08:04 PM
உக்ரைனில் ஏவுகணைத் தாக்குதலில் எம்.ஹெச்.17 விமானம் வீழ்த்தப்படுவதற்கு முன்பு, அதில் பயணித்தவர் நகைச்சுவைக்காக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிந்த புகைப்படப் பதிவு, நிஜமாகி அவரது நண்பர்களையும், அந்தப் பதிவைப் பார்த்தவர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கார் பான் (Cor Pan) என்ற நெதர்லாந்தைச் சேர்ந்த இளைஞர் தனது மொபைலில் பிடித்த எம்.ஹெச்.17 விமானத்தின் புகைப்படத்தை இணைத்து, அதில் "ஒருவேளை இது மாயமானால், விமானம் இப்படித்தான் இருந்தது என்பதை அறிவீர்" எனும் பொருள்தரும் பதிவை ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்திருந்தார்.
கடந்த மார்ச்சில் மாயமான எம்.ஹெச்.370 விமானம் இதுவரை அறியக் கிடைக்காத நிலையை, நகைச்சுவையாகக் குறிப்பிடும் வகையில், கார் பான் இவ்வாறு ஒரு பதிவை இட்டிருக்கிறார்.
ஆனால், ஆம்ஸ்டர்டாமில் இருந்து புறப்பட்ட அந்த விமானம், கிழக்கு உக்ரைனில் ஏவுகணைத் தாக்குதலில் நொறுங்கி விழுந்தது. அதில், பயணித்த 298 பேரும் உயிரிழந்தனர். அதில், தனது காதலியுடன் கார் பானும் இறந்துவிட்டதாக நம்பப்படுகிறது.
இந்தக் கோரச் சம்பவத்துக்குப் பின்னர், கார் பானின் ஃபேஸ்புக் பதிவை, 'தி கார்டியன்' பத்திரிகை செய்தியாக வெளியிட்டு, அது பலராலம் பகிரப்பட்டு வருகிறது.
கார் பான் பதிவேற்றம் செய்த எம்.ஹெச்.17 விமானத்தின் புகைப்படம், இதுவரை 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரால் பகிரப்பட்டுள்ளது. அந்தப் பதிவில், அவரது நண்பர்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலையும், அவருடனான நட்பைப் பற்றிய நினைவுகளையும் பகிர்ந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT