Published : 16 Feb 2014 12:00 AM
Last Updated : 16 Feb 2014 12:00 AM
பெர்லின்
ஆபாசப் படம் எடுக்கும் கும்பல் மீதான விசாரணை தொடர்பான தகவலை கசிய விட்ட ஜெர்மனி உணவு மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் ஹான்ஸ் பீட்டர் பிரெட்ரிக், தனது பதவியை வெள்ளிக்கிழமை ராஜினாமா செய்தார்.
இது ஜெர்மனி பிரதமர் ஏஞ்செலா மெர்கல் தலைமை யிலான அரசுக்கு பின்னடை வாகக் கருதப்படுகிறது.
ஜெர்மனி நாட்டில் சர்வதேச அளவில் குழந்தைகளை வைத்து ஆபாச படம் எடுக்கும் கும்பல் செயல்பட்டு வருவதாக போலீஸாருக்கு தகவல்கள் கிடைத்தன. இது தொடர்பாக விசாரணை நடத்தியபோது, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், ஜெர்மனி எம்.பி.யுமான செபாஸ்டியன் எடாத்தி சம்பந்தப்பட்டிருப்பதாகத் தெரியவந்தது. அவரின் வீடு, அலுவலகங்களில் போலீஸார் சோதனையிட்டனர். இதற்கிடையே விசாரணை தொடர்பாக செபாஸ்டியனுக்கு முன்பே தகவல் தெரிந்திருக்கலாம் என்றும், அவர் ஆதாரங்களை அழித்திருக்கலாம் என்றும் புகார் கிளம்பியது.
ஆனால், விசாரணை குறித்த தகவல் களை தெரிவித்தது யார் எனத் தெரியாமல் இருந்தது. இந்நிலையில், அந்த தகவல்களை வெளியிட்டது பிரெட்ரிக்தான் என்று செபாஸ்டியனின் சமூக ஜனநாயகக் கட்சி கூறியுள்ளது.
இதையடுத்து, பிரெட்ரிக் கிற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அரசு ரகசியத்தை அவர் காப்பாற்றத் தவறிவிட்டார் என்று புகார் கூறப்பட்டது. இந்நிலையில், தான் வகித்து வந்த அமைச்சர் பதவியை பீட்டர் பிரெட்ரிக் வெள்ளிக்கிழமை ராஜினாமா செய்துவிட்டார்.
ஆபாசப் படம் தொடர்பான விசாரணை, பிரெட்ரிக் உள்துறை அமைச்சராக இருந்தபோது நடைபெற்றது. அவர் 20011 மார்ச் முதல் 2013 டிசம்பர் வரை உள்துறை அமைச்சராகவும், அதன் பின் தற்போது வரை வேளாண் துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். தன் மீது விசாரணை நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, உடல் நலக்குறைவை காரணம் காட்டி செபாஸ்டியன் எடாதி, தனது எம்.பி. பதவியை ஏற்கெனவே ராஜினாமா செய்துவிட்டார் என்பது நினைவுகூரத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT