Published : 27 Nov 2013 12:00 AM
Last Updated : 27 Nov 2013 12:00 AM

ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால் நேட்டோ படை முழுமையாக வெளியேறிவிடும்

பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால் அமெரிக்க கூட்டுப் படைகள் (நேட்டோ) ஆப்கானிஸ்தானைவிட்டு முழுமையாக வெளியேறிவிடும் என்று அந்த நாட்டுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள அமெரிக்க கூட்டுப்படைகள் படிப்படியாகக் குறைக்கப்பட்டு வருகின்றன. 2014-ம் ஆண்டுக்குள் அனைத்து படைகளும் வாபஸ் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 2014க்குப் பின்னரும் அமெரிக்க ராணுவத்தின் 15,000 சிறப்பு கமாண்டோக்கள் ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து தங்கியிருப்பது தொடர்பான ஒப்பந்தம் இப்போது முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் தொடர்பாக அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அதிகாரமிக்க 50 குழுக்களின் மாநாடு தலைநகர் காபூலில் நான்கு நாள்களாக நடைபெற்றது. 2500-க்கும் மேற்பட்ட உள்ளூர் தலைவர்கள் பங்கேற்ற இந்த மாநாட்டில், ஆப்கானிஸ்தானின் நலன் கருதி அமெரிக்கப் படைகள் தொடர்ந்து தங்கியிருக்க ஒருமனதாக ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது.

இதனை அந்த நாட்டு அதிபர் ஹமீது கர்சாய் ஏற்க மறுத்து வருகிறார். அடுத்த ஆண்டு ஏப்ரலில் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. அதன் பின்னரே அமெரிக்காவுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதா, வேண்டாமா என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று கர்சாய் அறிவித்துள்ளார்.

அமெரிக்கா எச்சரிக்கை

இந்நிலையில் 3 நாள் பயணமாக ஆப்கானிஸ்தான் சென்ற அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைஸ், அதிபர் ஹமீது கர்சாயை திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார்.

அப்போது, இந்த ஆண்டு இறுதிக்குள் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். இல்லையெனில் 2014-க்கு முன்னரே அமெரிக்க கூட்டுப் படைகள் முழுமையாக வாபஸ் பெறப்ப டும், ஒரு அமெரிக்க வீரர்கூட ஆப்கானிஸ்தானில் தங்கியிருக்க மாட்டார் என்று சூசன் ரைஸ் தெரிவித்தார்.

இந்தத் தகவல்களை அமெரிக்க அதிபர் மாளிகை வெளியிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x