Published : 09 Feb 2014 02:04 PM
Last Updated : 09 Feb 2014 02:04 PM
உள்நாட்டுப் போர் தீவிரமாக நடைபெற்று வரும் சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்த ஹோம்ஸ் நகரில் இருந்து 83 குடிமக்கள் ஐ.நா மனித உரிமைக் குழுவினரால் மீட்கப்பட்டனர்.
ராணுவத்தின் முற்றுகைக்கு உட்பட்டிருந்ததால், ஹோம்ஸ் நகரில் உள்ள குடிமக்கள் கிளர்ச்சியாளர்களால் சிறைப் பிடிக்கப்பட்டிருந்தனர். சிரியாவில் உள்நாட்டுப் போர் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஹோம்ஸ் நகரம் கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்தது. இந்நகரை கடந்த 600 நாட்களாக ராணுவம் முற்றுகையிட்டிருந்தது.
இந்நிலையில், ஐ.நா. மனித உரிமைக்குழுவினர் இருதரப்பி னரிடையே பேச்சு நடத்தினர். இதில் தற்காலிக போர்நிறுத்தம் ஏற்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை இந்த மீட்புப் பணி தொடங்கியது. ஹோம்ஸ் நகருக்குள் இருந்து மக்கள் தங்கள் உடமைகளுடன் வெளியேற கிளர்ச்சியாளர்கள் அனுமதித்தனர். முதல்கட்டமாக 83 பேர் வெளியேறினர். அவர்களை சிரியா செம்பிறை இயக்கத்தினர் மீட்டு, பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.
இரு ஆண்டுகளாக உள் நாட்டுப் போர் நடைபெற்று வரும் சூழலில், ராணுவம் மற்றும் கிளர்ச்சியாளர்களுக்கு இடையில் சிறைப்பட்டிருந்த மக்கள் மீட்கப்பட்டிருப்பது பெரும் திருப்புமுனையாகக் கருதப்படு கிறது.
இது தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் குழு சிரியா ஒருங்கிணைப்பாளர் யாகூப் எல் ஹிலோ கூறுகையில், “மீட்கப் படும் மக்களை எதிர்நோக்கி முன் கூட்டியே உணவு, மருத்துவ உதவி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் ஆயத்தமாக வைக்கப்பட்டிருந்தன” என்றார்.
சிரியாவைச் சேர்ந்த செம்பிறை எனும் தன்னார்வ இயக்கத்தினர் மக்களை பாதுகாப்பாக அழைத்து வந்தனர். விடுவிக்கப்பட்டவர்களில் சிலர் ஏறத்தாழ 18 மாதங்களுக்கு மேலாக தங்கள் குடும்பத்தினரைப் பிரிந்து இருந்தனர். முதல்கட்டமாக பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் விடுவிக்கப் பட்டனர். அவர்கள் விரும்பிய இடத்தில் பாதுகாப்பாக அழைத்துச் சென்று விடப்பட்டனர்.
வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாள்களும் குடிமக்கள் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்படுவர். கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை அதிக அளவு பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுவிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT