Published : 23 Nov 2013 12:00 AM
Last Updated : 23 Nov 2013 12:00 AM
நேபாள அரசியல் நிர்ணய சபை தேர்தலில் நேபாள காங்கிரஸ் மற்றும் சிபிஎன்-யுஎம்எல் (நேபாள கம்யூனிஸ்ட் கட்சி- ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.
நேபாள நாடாளுமன்றத்தின் மேல் சபை, கீழ் சபையை அப்போதைய மன்னர் ஞானேந்திரா 1990-ல் கலைத்தார். இந்நிலையில் மன்னராட்சிக்கு எதிராகப் போராடிய மாவோயிஸ்டுகள் 2006-ல் அரசியல் பாதைக்குத் திரும்பினர்.
2007-ம் ஆண்டில் 330 உறுப்பினர்கள் அடங்கிய இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. அடுத்த ஆண்டில் மன்னர் ஆட்சி அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
இதை தொடர்ந்து புதிய அரசியல் சாசனத்தை உருவாக்குவதற்காக 601 பேர் கொண்ட அரசியல் நிர்ணய சபையை உருவாக்க அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக ஒப்புக்கொண்டன.
இந்த சபைக்கு 240 உறுப்பினர்கள் நேரடித் தேர்தல் மூலமும் 335 உறுப்பினர்கள் கட்சிகள் பெறும் வாக்கு சதவீதத்தின் விகிதாசாரத்தின்படியும் மீதமுள்ள 26 இடங்கள் நேரடி நியமனம் மூலமும் தேர்ந்தெடுக்கப்படுவர். சபையின் ஆயுள் காலம் 2 ஆண்டுகள்.
முதல்முறையாக 2008-ல் நடைபெற்ற தேர்தலில் யுசிபிஎன்- மாவோயிஸ்ட் (ஐக்கிய நேபாள கம்யூனிஸ்ட் கட்சி) பெரும்பான்மை பெற்றது.
ஆனால் ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்காததால் கூட்டணி அரசு அமைக்கப்பட்டது. மாவோயிஸ்ட் தலைவர் பிரசண்டா பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், அவரது ஆட்சியில் அரசியல் சாசனம் வரையறுக்கப்படவில்லை.
இதைத் தொடர்ந்து நீண்ட இழுபறிக்குப் பின்னர் தற்போது அரசியல் சாசன நிர்ணய சபைக்கான பொதுத் தேர்தல் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன் அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியாக சில நாள்கள் ஆகும் என்று தெரிகிறது.
இப்போதைய நிலையில் சிபிஎன்-யுஎம்எல் கட்சிக்கும் நேபாள காங்கிரஸுக்கும் இடையே யார் முன்னிலை பெறுவது என்பதில் கடும் போட்டி நிலவுகிறது.
தேர்தல் நடைபெற்ற 240 தொகுதிகளில் சிபிஎன்-யுஎம்எல் கட்சி 42 இடங்களைக் கைப்பற்றியுள்ளது, 55 இடங்களில் முன்னணியில் உள்ளது.
நேபாள காங்கிரஸ் 38 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது, 66 இடங்களில் முன்னணியில் உள்ளது.
யுசிபிஎன்- மாவோயிஸ்ட் கட்சி 13 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
இந்தத் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாகவும் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என்றும் யுசிபிஎன்- மாவோயிஸ்ட் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல் நிர்ணய சபையில் தங்கள் கட்சி பங்கேற்காது என்றும் அந்தக் கட்சி அறிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT