Published : 04 Feb 2014 11:54 AM
Last Updated : 04 Feb 2014 11:54 AM
மாஸ்கோ புறநகர்ப் பள்ளியில் துப்பாக்கியுடன் வகுப்பறைக்குள் நுழைந்த மாணவன், ஆசிரியரையும் போலீஸ் அதிகாரியையும் சுட்டுக் கொன்றுவிட்டு 20 மாணவர்களை பிணைக் கைதிகளாக சிறை பிடித்தான்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கமாண்டோ படையினர் அதிரடியாகச் செயல்பட்டு அந்த மாணவனை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். ரஷ்ய தலைநகர் மாஸ்கோவின் புறநகர்ப் பகுதியில் பிரபல பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் மேல்நிலைக் கல்வி பயிலும் மாணவன் ஒருவன் திங்கள்கிழமை துப்பாக்கியுடன் வகுப்பறைக்குள் புகுந்தான்.
அங்கு தாவரவியல் ஆசிரியரையும் அவரது வகுப்பில் இருந்த 20 மாணவ, மாணவிகளையும் சிறைபிடித்தான். அவனோடு பேச்சுவார்த்தை நடத்த முயன்ற ஆசிரியரை சுட்டுக் கொன்றான். தகவலறிந்து அங்கு வந்த போலீஸ் அதிகாரியையும் துப்பாக்கியால் சுட்டான். படுகாயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
உடனடியாக பள்ளியை சுற்றி வளைத்த போலீஸார், அனைத்து மாணவர்களையும் அங்கிருந்து வெளியேற்றினர். பின்னர் அதிரடியாகச் செயல் பட்டு மாணவனிடம் இருந்து துப்பாக்கியைப் பறித்து அவனைக் கைது செய்தனர். அவனது பிடியில் இருந்த 20 மாணவ, மாணவிகளையும் போலீஸார் பத்திரமாக மீட்டனர்.
முதலில் வெளியான தொலைக்காட்சி செய்திகளில், ஆயுதம் ஏந்திய மர்ம நபர், மாணவர்களை பிணைக்கைதியாக பிடித்து வைத்திருப்பதாக தகவல்கள் ஒளிபரப்பாகின. பின்னர் அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவனே இந்த துணிகரச் செயலில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. அதிர்ஷ்டவசமாக பள்ளி மாணவர்களில் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.
சம்பவத்துக்கு காரணமான மாணவனை ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்றுள்ள போலீஸார், எதற்காக அவர் இவ்வாறு நடந்து கொண்டார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் மனநலம் பாதிக்கப் பட்டுள்ளாரா என்பது குறித்து மனநல நிபுணர்களும் விசாரித்து வருகின்றனர்.
குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் ரஷ்யாவின் சோச்சி நகரில் இன்னும் சில நாள்களில் தொடங்க உள்ளது. அதற்கு முன்னதாக இந்தச் சம்பவம் நடைபெற்றிருப்பது குளிர் கால ஒலிம்பிக் போட்டியின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி இருப்பதாக மேற்கத்திய ஊடகங்கள் சுட்டிக் காட்டியுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT