Published : 15 Feb 2014 09:35 AM
Last Updated : 15 Feb 2014 09:35 AM

வெள்ளத்தில் மிதக்கும் பிரிட்டன்: மிரட்டும் புதிய புயல்: 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கரை புரளும் தேம்ஸ் நதி

பிரிட்டனில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வரும் நிலையில் மேலும் ஒரு புதிய புயல் மிரட்டி வருகிறது. கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பிரிட்டனில் 250 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் நிலையில் கனமழையும் பெய்து வருவதால் அங்கு இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மேலும் ஒரு புயல் பிரிட்டனை நோக்கி நகர்ந்து வருவதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தப் புயல் இங்கிலாந்தின் தென்மேற்குப் பகுதியில் கரையைக் கடக்கும் என்றும் இதன் காரணமாக, பலத்த காற்றுடன் கனமழை பெய்வதுடன் பனிப்பொழிவும் அதிகமாக இருக்கும் என்றும் அந்த மையம் கூறியுள்ளது. இந்தப் புயல் காரணமாக இங்கிலாந்தின் தெற்குக் கடற்கரையில் மணிக்கு 128 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று சுற்றுச்சூழல் முகமை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிரிட்டனை கடந்த புதன்கிழமை ஒரு புயல் தாக்கியது. இதனால் பலத்த காற்றுடன் கனமழையும் பெய்ததில் குடியிருப்புப் பகுதி களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மழைக்கு ஒருவர் உயிரிழந்தார். சுமார் 56 ஆயிரம் பேர் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர்.

தொடர் கனமழை காரணமாக கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஓரிரு நாளில் தேம்ஸ் நதியில் வெள்ளம் கரைபுரளும் என அஞ்சப்படுகிறது. எனவே, கரையோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்க ளுக்குச் செல்லுமாறு அறிவுறுத் தப்பட்டுள்ளனர். வெள்ள நிவாரணத்துக்காக ஐரோப்பிய யூனியனிடமிருந்து நிதியுதவி கோரப்படும் என பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த நாடுகளின் நிபுணர்கள் உதவியோடு, தாழ்வான பகுதிகளில் தேங்கி உள்ள வெள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். இதற்கிடையே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற் கொள்வதற்கு ரூ.2.6 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக துணைப் பிரதமர் நிக் கிளெக் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x