Published : 06 Feb 2014 10:11 AM
Last Updated : 06 Feb 2014 10:11 AM
தாய்லாந்து நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டதாக இந்திய வம்சாவளி தொழிலதிபர் சதீஷ் சேகல் என்பவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
தாய்லாந்து நாட்டில் பிரதமர் யிங்லக் ஷினவத்ரா பதவி விலக வலியுறுத்தி போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்திய வம்சாவளி தொழிலதிபரும், தாய் – இண்டியன் பிசினஸ் அசோசியேஷன் தலைவருமான சதீஷ் சேகல் அரசுக்கு எதிரான ஒரு போராட்டத்துக்கு தலைமை வகித்ததாக கூறி அவரை நாட்டு விட்டு வெளியேறுமாறு தாய்லாந்து அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனை அரசின் சட்டம் ஒழுங்கு பராமரிப்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் செவ்வாய்க்கிழமை கூறினார். சேகலை வெளியேற்றுவதற்கு உரிய நடைமுறைகளை தொடங் கும்படி குடியேற்றத்துறை மற்றும் போலீஸாருக்கு உத்தர விடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அரசுக்கு எதிரான போராட்டங் களை ஒடுக்குவதற்காக தலைநகர் பாங்காங்கில் 60 நாள்களுக்கு நெருக்கடி நிலை பிரகடனம் செய்து காபந்து அரசு கடந்த ஜனவரி 22-ம் தேதி உத்தரவிட்டது. இந்நிலையில் “நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்ட பிறகு எனது அரசியல் நடவடிக்கைகளை நிறுத்திவிட்டேன்” என்று சேகல் கூறியுள்ளார். அவரது பேட்டியை அந்நாட்டின் நேஷன் நாளேடு வெளியிட்டுள்ளது.
இதனிடையே அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட ப்ரா புத்தா இஸ்ஸாரா என்ற புத்த பிட்சுவை அவர் வகித்த மதப் பொறுப்பில் இருந்து நீக்கி தேசிய அளவிலான புத்தமத நிர்வாகம் அறிவித்துள்ளது. “அவருக்கு எதிராக கைது ஆணை பெறுவதற்கு குற்றவியல் நீதிமன்றத்தை அணுகியுள்ளோம். நீதிமன்ற உத்தரவு கிடைத்தவுடன் அவர் கைது செய்யப்படுவார்” என அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT