Published : 24 Dec 2013 12:00 AM
Last Updated : 24 Dec 2013 12:00 AM
உக்ரைன் அதிபர் விக்டர் யானு கோவிச் பதவி விலக வலியுறுத்தி, தலைநகர் கீவில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை லட்சம் பேர் திரண்டனர்.
அதிபர் யானுகோவிச் கடந்த மாதம் ஐரோப்பிய யூனியனுடன் உக்ரைனை இணைக்க மறுத்ததை தொடர்ந்து, மேற்கத்திய நாடுகளின் ஜனநாயக அமைப்புக்கு ஆதரவான மக்கள் போராட்டத்தில் இறங்கினர். அமைதியான போராட்டத்தில் போலீஸார் அடக்குமுறையை கையாண்டதால், இப்போராட்டம் அதிபருக்கு எதிரானதாக மாறியது. இப்போராட்டத்தை எதிர்க்கட்சி களும் ஊக்குவித்து வருகின்றன.
சிறையில் அடைக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் சிலரை விடுதலை செய்தும், உயர் அதிகாரி கள் சிலரை சஸ்பெண்ட் செய்தும் மக்களின் கோபத்தை அதிபர் தணிக்க முயன்றார்; என்றாலும் பயனில்லை. போராட்டக்காரர்களை படை பலத்தின் மூலம் அரசு அப்புறப் படுத்த முயன்றதற்கு மேற்கத்திய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இதனால் அடக்குமுறை முயற்சியை கைவிட்டு, போராட்டம் தானாக ஓய்ந்துவிடும் என்று கருதி அதிபர் யானுகோவிச் அமைதி காத்து வருகிறார். அதிபரின் ரஷிய ஆதரவு நிலையை வலுப்படுத்தும் வகையில், உக்ரைனுக்கு பல்வேறு உதவிகளை ரஷியா அண்மையில் அறிவித்தது.
உக்ரைன் அரசின் 1,500 கோடி டாலர் கடன் பத்திரங்களை வாங்கிக் கொள்வதாகவும், உக்ரைனுக்கு அளிக்கும் இயற்கை எரிவாயு விலையை மிகவும் குறைத்தும் ரஷியா அறிவித்தது. ஆனால் இதனை எதிர்க்கட்சிகள் நிராகரித்து விட்டன. தங்கள் எதிர்காலம் ஐரோப்பிய யூனியனுடன் தான் என்று திட்டவட்டமாக அறிவித்து விட்டன.
லட்சம் பேர் பேரணி
இந்நிலையில் கீவ் சுதந்திர சதுக்கத்தில் நேற்று முன்தினம் சுமார் லட்சம் பேர் திரண்டு அதிபருக்கு எதிராக முழக்கமிட்டனர். அதிபர் தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலை யானுகோவிச் அறிவிப்பதற்கு நிர்பந்திக்கும் வகையில், புத்தாண்டினை சுதந்திர சதுக்கத்திலேயே கழிக்குமாறு, போராட்டக்காரர்களிடம் எதிர்க்கட்சித் தலைவர் விட்டாலி கிளிட்ஸ்கோ கேட்டுக்கொண்டுள்ளார்.
“நாம் களைத்துவிடுவோம், வீட்டுக்குத் திரும்பிவிடுவோம் என அரசு நினைக்கிறது. இது ஒருபோதும் நடக்காது. ஆட்சியாளர்களை மாற்றுவதுதான் சீர்திருத்தங்களை அமல்படுத்துவதற்கான ஒரே வழி” என்று கிளிட்ஸ்கோ கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT