Published : 02 Feb 2014 12:00 AM
Last Updated : 02 Feb 2014 12:00 AM
ஜெனிவாவில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்ற சிரியா அமைதிப் பேச்சுவார்த்தை, எவ்வித உடன்பாடும் எட்டப்படாமலே முடிவுக்கு வந்தது. வரும் 10-ல் நடைபெற உள்ள அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தையில் சிரியா பங்கேற்குமா என்பதும் சந்தேகத்துக்குரியதாக உள்ளது.
ஐ.நா. அமைப்பின் சிரியாவுக்கான பிரதிநிதி லக்தர் பிரஹிமி இந்தப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதில் அரசுக்கும் அரசு எதிர்ப்பாளர்களுக்கும் இடையே போர் நிறுத்தம் குறித்து எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை. அத்துடன் இடைக்கால அரசு அமைப்பது குறித்து பேச்சுவார்த்தையே தொடங்கப்படவில்லை. ஹாம்ஸ் நகரில் முற்றுகைக்கு உள்ளாகி உள்ள போராட்டக்காரர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்களை வழங்கும் விஷயத்திலும் முன்னேற்றம் ஏற்படவில்லை.
கடந்த 2011 மார்ச் மாதம் சிரியா அரசுக்கு எதிராக புரட்சி வெடித்தது முதல் இதுவரை 1.3 லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தப் பேச்சுவார்த்தையின்போது, இந்த சண்டை ஏற்பட யார் காரணம் என்பதில் அரசு தரப்பினரும் அரசு எதிர்ப்பாளர்களும் இடையே ஒருவரை ஒருவர் குறைகூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ஜெனிவாவில் அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது முதல் இதுவரை நடைபெற்ற வன்முறைக்கு 1,900 பேர் கொல்லப்பட்டதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டி உள்ளன.
இதற்கிடையே, சர்வதேச ஒப்பந்தப்படி குறித்த காலக்கெடுவுக்குள் ரசாயன ஆயுதங்களை அழிக்கத் தவறியதற்காக சிரியா அதிபர் பஷார் அல்-ஆசாத் மோசமான விளைவுகளை சந்திப்பார் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கிடையே வரும் 10-ம் தேதி இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தை தொடங்கும் என பிரஹிமி தெரிவித்துள்ளார். ஆனால், "ஜெனிவா பேச்சுவார்த்தையில் ஆக்கப்பூர்வமான முடிவு எதுவும் ஏற்படாத நிலையில் 2-வது சுற்று பேச்சுவார்த்தையில் பங்கேற்க வேண்டுமா என்பது குறித்து அரசு ஆலோசிக்கும்" என சிரியா வெளியுறவுத் துறை அமைச்சர் வாலித் முவல்லம் கூறியுள்ளார்.
இவரது இந்தக் கருத்துக்கு சிரிய அரசு எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து வரும் அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. "சிரியா அரசு இதுவிஷயத்தில் தொடர்ந்து விளையாட்டுத்தனமாக நடந்து கொள்கிறது" என அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் எட்கர் வாஸ்குவெஸ் தெரிவித்தார்.-பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT