Published : 31 Mar 2014 02:39 PM
Last Updated : 31 Mar 2014 02:39 PM
இந்தியப் பெருங்கடலில் விழுந்தாக கூறப்படும் விமானம் எம்.எச்.370- ன் உடைந்த பாகங்களை தேடும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. இதுவரை எந்த முன்னேற்றமும் தெரியாத நிலையில், தேடல் நடவடிக்கை தொடரும் என்றும், அதற்கான கால அளவை நிர்ணயிக்க முடியாது எனவும் ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட் கூறினார்.
இது குறித்து பெர்த்தில் உள்ள ராயல் அஸ்திரேலிய கடற்படைத் தளத்திற்கு வந்த பிரதமர் டோனி அபாட் கூறுகையில், விமானத்தின் பாகங்களை தேடுவது குறித்து இதுவரை எந்த கால அளவும் நிர்ணயிக்கப் படவில்லை.
நாங்கள் குறைவான தகவல்களை வைத்துக் கொண்டு பெருங்கடலில் விமானத்தை தேடிக் கொண்டிருக்கிறோம். உலகின் தலைசிறந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் விமானத்தை தேடும் பணியில் உதவி செய்கிறார்கள். எனினும் சில காலம் இந்த தேடல் தொடர வேண்டும். அதே சமயம் இது ஒன்றும் எளிதான விஷயம் அல்ல..
தேடல் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுவரும் வீரர்களின் பங்களிப்பு பாராட்டுக்குறியது. உலகின் சிறந்த மூளைகள் மேற்கொண்டு வரும் தேடலாக இது இருக்கிறது. இதுவரை இது போல எந்த ஒரு விவகாரத்திலும் இத்தகைய சர்வதேச ஒத்துழைப்பு பார்க்க முடிந்ததில்லை.
இது வரை பணிகள் அனைத்துமே யூகத்தின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அமெரிக்கா, நியூசிலாந்து, மலேசியா போன்ற நாடுகளை போல சீனா, ஜப்பான் மற்றும் கொரியாவும் தேடல் நடவடிக்கைகளில் கைக் கோர்த்தமை மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. இந்த தேடல் சர்வதேச அளவில் உள்ள மனிதநேயத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. விமானம் குறித்து அசாதாரணமான மர்மத்தை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் அனைத்து நாடுகளும் ஒருமித்து முயற்சித்து வருகின்றது. விரைவில் விமானத்தில் பயணித்த 239 பேர்களின் குடும்பத்தினருக்கு அமைதியை ஏற்படுத்தும் வகையில் விரைவில் ஒரு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இந்த தேடல் தொடர்கிறது” என்றார்.
கருப்புப் பெட்டி விவகாரம்
விமானம் விழுந்து முழ்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் இந்தியப் பெருங்கடல் பகுதியை நோக்கி, கருப்புப் பெட்டியைக் கண்டறியும் கருவியுடன் ஆஸ்திரேலிய போர்க்கப்பல் ஒன்று விரைந்துள்ளது.
ஆஸ்திரேலியாவிலிருந்து 1,850 கி.மீ. தொலைவிலிருக்கும் அந்தப் பகுதியை அக்கப்பல் சென்றடைய 3 முதல் 4 நாள்கள் வரை ஆகும் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக விமானத்தின் கருப்புப் பெட்டியை கண்டுபிடிக்கும் முயற்சியில்,அமெரிக்க கணித வல்லுனர்களும் ஈடுபட்டுனர். எனினும் இதுவரை கருப்பு பெட்டியின் சிக்னலை ப்ளுபின் - 21 என்ற கருவி கண்டறிய முடியவில்லை. கருப்புப் பெட்டியின் பேட்டரி காலாவதி ஆக வாய்ப்பு உள்ளதால் இந்த பணியை விரைவுப் படுத்த ஆஸ்திரேலிய போர்க்கப்பலும் இணைந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT