Published : 29 Dec 2013 12:00 AM
Last Updated : 29 Dec 2013 12:00 AM

ஒரு குழந்தை சட்டத்தைத் தளர்த்தியது சீனா: மறுவாழ்வு முகாம்களும் மூடல்

சீனாவில் சுமார் 30 ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்ட ஒரு குடும்பம், ஒரு குழந்தை திட்டத்தை அந்த நாட்டு அரசு தளர்த்தியுள்ளது.

மேலும் “உழைப்பு மூலம் சீர்திருத்தம்” என்ற பெயரில் நடத்தப்பட்ட மறுவாழ்வு முகாம்களும் மூடப்படும் என்று சீன அரசு அறிவித்துள்ளது.

மக்கள் தொகை கட்டுப்பாடு

சீனாவில் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த 1970-களில் ஒரு குடும்பம், ஒரு குழந்தை சட்டத்தை அந்த நாட்டு அரசு அமல்படுத்தியது. இதன்படி கடந்த 42 ஆண்டுகளில் 40 கோடி பிறப்புகள் தடுக்கப்பட்டுள்ளன.

இந்தச் சட்டத்தில் சில விதிவிலக்குகளும் அளிக்கப்பட்டி ருந்தன. மிகக் குறைந்த எண்ணிக் கையில் வாழும் பழங்குடி மக்களுக்கு இந்தச் சட்டம் பொருந்தாது.

கிராமங்களில் வாழும் பெற்றோ ருக்கு முதல் குழந்தை பெண் குழந்தையாகப் பிறந்தால் அவர்கள் 2-வது குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் தம்பதியர் இருவரும் அவர்களின் பெற்றோருக்கு ஒரே குழந்தை என்றால் அவர்களும் 2-வது குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதிக்கப்பட்டது.

மற்றவர்கள் கண்டிப்பாக ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக் கொள்ளக் கூடாது. இதை மீறினால் ரூ.16 கோடி வரை அபராதம் விதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சட்டத்தால் சீன மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர். ஒரு இளைஞர், தனது பெற்றோர் மற்றும் தனது தாய், தந்தை வழி பாட்டி, தாத்தாக்களை காப்பாற்றும் பொறுப்பை ஏற்க வேண்டிய சூழ்நிலை உருவானது.

சில குடும்பங்களில் எதிர்பாராதவிதமாக குழந்தை உயிரிழந்தாலோ, விபத்தில் சிக்கி ஊனமுற்றாலோ அந்த குடும்பத்தின் எதிர்காலம் கேள்விக்குறியானது.

ஒரு குழந்தை திட்டத்தால் சீனாவில் முதியோர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது. 2012 முதல் தொழிலாளர் பற்றாக்குறை சதவீதம் உயர்ந்தது. ஆண்டுக்கு 30 லட்சத்து 45 ஆயிரம் தொழிலாளர்கள் குறைந்து கொண்டே வந்தனர். இதேபோல் ஆண்களுக்கு நிகரான பெண்களின் சதவீதமும் குறைந்தது. 115 ஆண்களுக்கு 100 பெண்கள் என்ற நிலை உருவானது.

இந்த நிலை நீடித்தால் சீனாவின் மனிதவளத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதை உணர்ந்த சீன அரசு, ஒரு குடும்பம்- ஒரு குழந்தை சட்டத்தை இப்போது தளர்த்தியுள்ளது. தலைநகர் பெய்ஜிங்கில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் காங்கிரஸ் சட்டத்தை தளர்த்த அனுமதி அளித்தது.

இதன்படி தம்பதியரில் யாராவது ஒருவர் அவரது பெற்றோருக்கு ஒரே குழந்தையாக இருந்தால் அந்த தம்பதியர் 2 குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளலாம். இந்த சட்ட தளர்வால் சீனாவில் பெரும் பான்மை மக்கள், இரண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவில் தற்போதைய மக்கள் தொகை 135 கோடியாகும்.

மறுவாழ்வு முகாம்கள் மூடல்

உழைப்பின் மூலம் சீர்திருத்தம் என்ற திட்டத்தின் பெயரில் சீனா முழுவதும் சுமார் 300 மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. கடுமையான குற்றங்களில் ஈடுபடுபவர்களை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தாமல் நேரடியாக இந்த முகாம்களில் அடைக்கப்படுவர். அவர்களை எவ்வித விசாரணையும் இன்றி 4 ஆண்டுகள் வரை காவலில் வைத்திருக்க முடியும்.

1957 முதல் செயல்படும் இந்த முகாம்களில் அடைக் கப்பட்ட கைதிகள் பல்வேறு சித்திரவதைகளுக்கு ஆளாக்கப் படுவதாக நீண்ட காலமாக குற்றம் சாட்டப்பட்டது.

திருட்டு உள்ளிட்ட சிறிய குற்றங்களில் ஈடுபட்டவர்களையும் போலீஸார் முகாம்களில் அடைத்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக அம்னஸ்டி உள்ளிட்ட சர்வதேச மனித உரிமை அமைப்புகள் சீனாவை கடுமையாக குற்றம் சாட்டி வந்தன. இந்நிலையில் மறுவாழ்வு முகாம்கள் அனைத்தும் மூடப்படும் என்று சீன அரசு அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x