Published : 04 Dec 2013 10:23 AM
Last Updated : 04 Dec 2013 10:23 AM
பிள்ளையார் சதுர்த்தி ஊர்வலம் மாதிரி, பாகிஸ்தானில் முகரம் பத்தாம் நாள் ஊர்வலம் மாதிரி, பாலஸ்தீனில் ஹமாஸ் நடத்தும் வருஷாந்திர ஆண்டுவிழாக் கொண்டாட்ட ஊர்வலம் கலவரப் பிரசித்தி பெற்றது. ஊர்வலம் என்பது வெளித்தோற்றம். ஹமாஸின் அந்த தினத்து அறிவிப்புகளை மத்தியக் கிழக்கு முழுவதும் கூர்ந்து கவனிக்கும்.
அதுவும் ஆறாண்டுகளுக்கு முன்னர் அல் ஃபத்தாவுடன் தகராறு முற்றி அடிதடியாகி, யுத்தமாகவே பரிமாணம் பெற்று காஸா பகுதியை ஹமாஸ் தனது சமஸ்தானமாகவே ஆக்கிக்கொண்ட பிற்பாடு மேற்படி ஆண்டுவிழா ஊர்வலத்தின் முக்கியத்துவம் மேலும் அதிகரித்தது.
ஒரு போராளி இயக்கம் சட்டென்று முடிவு செய்து அமைதிப் பேச்சுகளுக்கு சம்மதித்து, ஒபாமாவை நம்புகிறோம் என்றெல்லாம் சொல்லி, இஸ்ரேலுடன் அவ்வப்போது போர் நிறுத்த உடன்படிக்கைகளெல்லாம் மேற்கொண்டு, முனிசிபல் தேர்தல்களை எதிர்கொண்டு, வெற்றி பெற்று, பிறகு அல் ஃபத்தாவுடன் இணைந்து ஆட்சியமைக்கும் அளவுக்கே சென்று, சண்டையிட்டு பிரிந்து காஸாவில் தனியாட்சி அமைத்ததென்பது (2007ல்) பாலஸ்தீன போராட்ட சரித்திரத்தில் மிக முக்கியமான ஓர் அத்தியாயம். இன்றுவரைக்கும் அங்கே ஹமாஸின் ஆட்சிதான்.
கடந்த ஆறு ஆண்டுகளாக காஸாவில் அதி விமரிசையாக ஆண்டுவிழா ஊர்வலம் நடத்தி, கொண்டாடித் தீர்த்த ஹமாஸ், இந்த வருஷம் அது இல்லை என்று சொல்லியிருப்பதுதான் அனைவருக்கும் வியப்பு. இஸ்ரேலுக்கே கூட! மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஹமாஸ் ஊர்வலம் போன்ற ஆடம்பரங்களை அதனாலேயே தவிர்க்க நினைத்திருக்கிறது.
அடிப்படையில் காஸாவில் நடைபெறும் ஹமாஸ் அரசாங்கத்துக்கான நிதி என்பது 90 சதவீதம் நன்கொடைகளாலேயே பெறப்படுவது. இதில் கிட்டத்தட்ட சரி பாதிப் பணம் சவூதி அரேபியாவிலிருந்து வருவது.
காஸா பகுதிக்குப் பக்கத்து வீடான எகிப்தில் மொஹம்மத் மோர்ஸி அதிபராக இருந்தவரைக்கும் அவர் நிறைய சகாயங்கள் செய்து வந்தார். ஆனால் சென்ற வருடம் நடந்த களேபரத்தில் மோர்ஸி தூக்கியடிக்கப்பட்டுவிட, புதிய ஆட்சியாளர்கள் ஹமாஸுக்கு உதவுவதை அம்போவென்று நிறுத்திவிட்டார்கள்.
ஹமாஸ் அதுநாள் வரை பெற்றுக்கொண்டிருந்த பொருளாதார உதவிகளில் சுமார் முப்பது சதவீதத்துக்கும் மேலாக மோர்ஸியால் வழங்கப்பட்டுக்கொண்டிருந்தது. அந்த ஏரியா சுத்தமாக ஆஃபாகிப் போனதால் ஹமாஸும் காஸா பகுதி மக்களும் தவித்துத் திண்டாடிப் போய்விட்டார்கள். எரிபொருள் கிடையாது, மின்சாரம் பற்றாக்குறை, அடிப்படை உணவுப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு என்று தொடங்கி, தொட்ட இனங்களிலெல்லாம் தொல்லை மயம்.
2011ல் சிரியாவில் உள்நாட்டு யுத்தம் மூண்ட நாளாக சவூதியில் இருந்து வந்துகொண்டிருந்த பணவரத்தும் படிப்படியாகக் குறையத் தொடங்கியது ஹமாஸுக்குப் பெரிய இடி.
ஒரு போராளி இயக்கமாக மட்டும் இருந்த காலத்தில் ஹமாஸுக்கு நிதி நெருக்கடி என்ற ஒன்று எப்போதும் இருந்ததில்லை. மத்தியக் கிழக்கிலேயே அல் காயிதாவுக்கு அடுத்தபடியாக வசதியாக வாழும் இயக்கம் என்று ஹமாஸைத்தான் சொல்லுவார்கள். பாலஸ்தீனிய விடுதலை இயக்கங்களின்பால் அன்பும் அனுதாபமும் மிக்க சர்வதேச முஸ்லிம் சமூகத்தினர் கண்ணை மூடிக்கொண்டு அள்ளிக் கொட்டினார்கள். நவீன ஆயுதங்களும் நாசகார ஏவுகணைகளும் விமான எதிர்ப்பு பீரங்கிகளுமாக ஹமாஸ் இஸ்ரேலை ஆட்டிப்படைத்ததெல்லாம் சமீப கால சரித்திரம்தான்.
இன்றைக்கு அதே ஹமாஸ்தான் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து, ஆண்டுவிழாக் கொண்டாட்டங்களையே ரத்து செய்திருக்கிறது. ஆண்டு பார்ப்பதில் உள்ள அவஸ்தைகள் அனைத்தையும் முழுமையாக அனுபவித்துக்கொண்டிருக்கிறது.
கொள்கைகளில் மாற்றமில்லை. கோஷங்களில் வேறுபாடில்லை. சிந்தனையில், செயல்பாட்டில் வித்தியாசமேதுமில்லை. ஆனால் ஆட்சியனுபவம் புதிது. அதன் இடர்பாடுகள் புதிது. ஒரு பெரும் சிக்கலென்றால் உடனே அரசுக்கு எதிராகப் பத்து ஏவுகணைகளை வீசியடிக்கும் ஹமாஸ் இப்போது தன்னைத்தானே மறுபரிசீலனை செய்யத் தொடங்கியிருக்கிறது.
இது கொண்டாட்ட நேரமல்ல. மிச்சம் பிடிக்கும் நேரம். கொந்தளிக்கும் தருணமல்ல. அமைதி காக்க வேண்டிய பொழுது. அன்பான குடிமக்களே, அரசுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள். இந்த இடர் விரைவில் நீங்கும். காஸா செழிப்புறும். பேசுவது யார்? ஹமாஸ்தான். காலம்தான் எத்தனை அழகாக எல்லோரையும் மாற்றி வடிவமைக்கிறது!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT