Published : 13 Dec 2013 12:00 AM
Last Updated : 13 Dec 2013 12:00 AM

லஷ்கர் - அடுத்த அல் காயிதா?

பிறக்கவிருக்கும் 2014-ல் அமெரிக்கா வுக்கும் இந்தியாவுக்கும் தீவிரவாத அபாயம் என்று ஏதேனும் உண்டானால் அது லஷ்கர் ஏ தொய்பாவால்தான் இருக்கும் என்று சொல்லியிருக்கிறது அமெரிக்க உளவுத்துறை.

ஒசாமா பின் லேடனின் மரணத்துக்குப் பிறகு இந்தப் பக்கம் தீவிரவாதத் தாக்குதல்கள் குறித்த அச்சம் சற்று மட்டுப்பட்டிருந்ததை மறுக்க முடியாது. சம்பவங்களும் கணிசமாகக் குறைந்தே இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது தெற்காசியத் தீவிரவாத இயக்கங்கள் குறித்த ஆய்வுத்தளமான satp.org.

ஆனால் தாலிபன்களையும் சிரியப் போராளிகளையும் அல் ஷபாப் போன்ற புதிய இயக்கங்களையும் உலகம் கவனிக்கத் தொடங்கியபிறகு லஷ்கரை அநேகமாக மறந்தே விட்டோம் என்பதுதான் உண்மை. இடைப்பட்ட காலத்தில் சவூதி அரேபியாவிலும் சில மேற்கு ஐரோப்பிய தேசங்களிலும் கணிசமாக நிதி வசூலித்து பீம புஷ்டியுடன் லஷ்கர் வளர்ந்திருக்கிறது.

ஹஃபீஸ் முஹம்மத் சயீதா, ஸாகியுர் ரெஹ்மான் லக்வியா, நாசர் ஜாவேதா, யார் இப்போது வழி நடத்துகிறார்கள், அவர் உள்ளே இருக்கிறாரா, வெளியேதான் இருக்கிறாரா என்பது குறித்தெல்லாம் எந்த விவரமும் கிடையாது. அஜ்மல் கசாபின் ஆசார்ய பீடாதிபதி யூசூப் முஸாமில்கூட ஒருவேளை இப்போது வழிநடத்தும் பொறுப்பில் இருக்கலாம் என்று சொல்கிறார்கள். பாதுகாப்பு வேண்டுமென்றால் பாகிஸ்தான் சிறைச்சாலை, பாயத் தயாரென்றால் ஆக்கிரமிப்பு காஷ்மீர்.

லஷ்கரின் பெருந்தலைவர்கள் இந்த விஷயத்தில் மிகத் தெளிவானவர்கள். எந்நாளும் அவர்கள் ஐ.எஸ்.ஐ.யைப் பகைத்துக் கொள்வதில்லை. ஆள்பவர்களுடன் முட்டிக்கொள்வதில்லை. தாலிபன் அரசாங்கத் துக்கு எதிரே கொடி பிடித்து நின்றாலும் தள்ளி நின்று கண்ணை மூடிக்கொள்வார்களே தவிர இந்தக் கட்சி, அந்தக் கட்சி என்று காட்டிக்கொள்ளவே மாட்டார்கள். லஷ்கருக்குத் தாலிபனும் வேண்டும், நவாஸ் ஷெரீஃபும் வேண்டும். பாக். ராணுவமும் தோழன், பழிவெறியுடன் திரியும் அதன் எதிரி இயக்கங்களும் சிநேகிதம்.

ஒரு ப்ரொஃபஷனல் தீவிரவாத இயக்கமாகத் தன்னைக் கட்டமைத்துக்கொள்ள லஷ்கர் கடந்து வந்த பாதை மிகவும் கரடுமுரடானது. அல் காயிதாவுடன் தொடர்பு இருந்ததே தவிர தாலிபன் அளவுக்கு லஷ்கர் அத்தனை நெருங்கிய இயக்கமாக இருந்ததில்லை. காஷ்மீர்தான் பிரதான நோக்கம் என்று காட்டிக்கொள்வதில் ஒரு சௌகரியம் இருக்கிறது. பிற விவகாரங்களில் நீ ஏன் வாய்மூடி இருக்கிறாய் என்று யாரும் சுலபத்தில் கேட்டுவிட மாட்டார்கள்.

ஆனால் லஷ்கருக்குக் காஷ்மீரைக் காட்டிலும் வலுவான நோக்கங்கள் இருக்கின்றன. அல் காயிதா நிகழ்த்தியது போன்ற, அல்லது அதைக் காட்டிலும் பிரம்மாண்டமான முறையில் அமெரிக்கா மீதான ஒரு பெரும் தாக்குதல் என்பது அதன் நெடுநாள் விருப்பம். தெற்காசியப் பிராந்தியத்தில் சிதறிக் கிடக்கும் அனைத்து இயக்கங்களையும் ஒருங்கிணைத்து ஒரு கூட்டமைப்பு போல இயங்கவேண்டும் என்கிற பெருங்கனவைச் சுமந்துகொண்டு லஷ்கர் வளர்ந்துகொண்டிருக்கிறது.

இதற்கு முதல் படியாக பாகிஸ்தானியர்க ளுக்கு மத்தியில் நிரந்தரமான நல்ல பெயர் சம்பாதித்தாக வேண்டும். காஷ்மீருக்கான ஒரு போராளி இயக்கமாக அவர்களுக்கு அறிமுக மாகியிருப்பது போதாது. இன்னும் பெரிதாக. இன்னும் சிறப்பாக.

லஷ்கர் சமீபத்தில் பாகிஸ்தானில் பல்வேறு கிராமப்புறங்களில் ஏழை மாணவர்களுக்கான இலவசப் பள்ளிக்கூடங்களைத் தொடங்கியி ருக்கிறது. ஏற்கெனவே பல பள்ளிகளை நடத்திக்கொண்டிருக்கும் லஷ்கர், இப்போது இதனுடன் நடமாடும் ரத்த வங்கி, இலவச மருத்துவமனைகள் என்றும் திட்டத்தை விரிவு படுத்தியிருகிறது. புயல் வெள்ள பாதிப்பு காலங்களில் வரிந்து கட்டிக்கொண்டு மக்கள் சேவைக்கு வந்து இறங்கிவிடுகிறார்கள்.

நல்ல காரியம் செய்பவர்களுக்கு அள்ளிக் கொடுத்தால் தப்பில்லை என்று வேறெப்படி ஜனங்களுக்குத் தோன்றச் செய்ய முடியும்?

ஆப்கனிஸ்தானிலும் பாகிஸ்தானிலுமாக லஷ்கருக்கு சுமார் இருபது பயிற்சி முகாம்கள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. ஐந்நூறு முதல் ஆயிரம் வீரர்களைக் கொண்ட அமைப்பாக அறியப்பட்ட லஷ்கரில் இன்று ஆறாயிரத்துக் கும் மேற்பட்ட போராளிகள் இருப்பதாகச் சொல்லுகிறார்கள்.

அடுத்த அல் காயிதாவாக உருப்பெறுவ தற்கான சகல சாத்தியங்களையும் முயற்சி செய்துகொண்டிருக்கும் லஷ்கர், இந்தியாவுக்கு சந்தேகமில்லாமல் மிக நெருக்கமான அச்சுறுத்தல்.

இது மிகக் கவனமாக இருக்கவேண்டிய தருணம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x