Published : 15 Feb 2014 12:11 PM
Last Updated : 15 Feb 2014 12:11 PM

போரில் பிரிந்த குடும்பத்தினர் திட்டமிட்டபடி உறவினர்களை மீண்டும் சந்திக்க ஏற்பாடு: தென் கொரியா, வட கொரியா பேச்சில் உடன்பாடு

கொரியா போரின்போது பிரிந்த குடும்பத்தினர் உறவினர்களை மீண்டும் சந்திக்க ஏற்பாடு செய்தி ருந்த நிகழ்ச்சியை திட்டமிட்டபடி நடத்துவது என தென் கொரியாவும் வட கொரியாவும் நடத்திய உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டது. வெள்ளிக்கிழமை இந்த கூட்டம் நடைபெற்றது.

தென்கொரியாவும் அமெரிக்கா வும் சேர்ந்து நடத்தும் கூட்டு ராணுவப் பயிற்சியும் இந்த நிகழ்ச்சியும் சேர்ந்து வருவதால் அதை ஏற்கமுடியாது. அதை தள்ளிப்போடவேண்டும். இல்லா விட்டால் பிரிந்த குடும்பத்தினர், உறவினர்களை மீண்டும் சந்திக்கும் நிகழ்ச்சிக்கு ஒத்துழைப்பு தர முடியாது என வட கொரியா அறிவித்திருந்தது.

இந்நிலையில் இந்த பிரச்சினை யில் உடன்பாடு ஏற்பட்டது. மேலும் இரு நாடுகளும் ஒன்றை ஒன்று கடுமையான வார்த்தைகளால் தாக்கிப் பேசுவதில்லை என்றும் இருதரப்பும் ஒப்புக்கொண்டன. இப்போதுதான் ஆரம்பித்துள்ள பேச்சு வார்த்தையை தகுந்த நாளில் மீண்டும் தொடர்வது எனவும் ஒப்புக்கொள்ளப்பட்டது என பேச்சுவார்த்தைக்கான பிரதி நிதிகள் குழுவின் தென்கொரிய தரப்பு தலைவர் கிம் கியு ஹூன், சியோலில் வெளியிட்ட பத்திரிகைக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உடன்பாடு தொடர்பான அறிக்கை வட கொரியாவின் அதிகாரபூர்வ செய்தி நிறுவன மான கேசிஎன்ஏ தரப்பிலும் வெளி யிடப்பட்டுள்ளது.

இதன்படி ஏற்கெனவே திட்ட மிட்டபடி கும்காங் மலையில் பிப்ரவரி 20 முதல் 25 வரை பிரிந்த குடும்பத்தினர் தமது உறவினர் களை சந்திப்பார்கள்.

அமெரிக்காவும் தென் கொரியா வும் இணைந்து பிப்ரவரி 24ம்-தேதி தொடங்க உள்ள வருடாந்திர ராணுவ கூட்டுப்பயிற்சி ஒத்தி வைக்கப்பட்டால்தான், போரின் போது குடும்பங்களை விட்டு பிரிந்த கொரியர்கள் மீண்டும் சந்திக் கும் நிகழ்ச்சிக்கு ஒத்துழைப்பு தரப்படும் என்கிற தனது முந்தைய நிலையை வடகொரியா மாற்றிக்கொண்டுள்ளது பெரிய சலுகையாக கருதப்படுகிறது.

ராணுவம் சம்பந்தப்பட்ட விவகாரத்தையும் மனிதநேயம் சம்பந்தப்பட்ட பிரச்சினையையும் இணைத்துப் பேசுவதை ஏற்க முடியாது என்பது தென் கொரியா வின் நிலை.

2007ம் ஆண்டிலிருந்தே இரு நாடுகளும் உயர்நிலைக்குழு நிலையில் சந்தித்துப் பேசுவதை தொடர்வது என காட்டும் ஆர்வம் ஆக்கபூர்வ பேச்சுவார்த்தைக்கு வழி வகுக்கும் என நம்பப்படுகிறது.

பிரிந்த குடும்பத்தினர் தமது உறவினர்களை மீண்டும் சந்திக்க ஏற்பாடு செய்வது மிக முக்கியமான நிகழ்வு ஆகும் என்கிற எமது நிலையை வட கொரியா ஒப்புக் கொண்டதால்தான் உடன்பாடு ஏற்பட்டது. இது நம்பிக்கை ஏற்படுத்துவதற்கான முதல் அடி என்றார் கிம்.

இந்த உடன்பாடு பான்முன்ஜம் என்ற கிராமத்தில் புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஏற்பட்டது. இந்த கிராமத்தில்தான் கொரியாவில் 1950 முதல் 53ம் ஆண்டு வரை நடந்த போர் முடிவுக்கு வர சமாதான ஒப்பந்தம் கையெழுத்தான இடம்.

இரு கொரியாக்களுக்கும் இடையில் உறவு மேம்பட வேண்டும் என்பதில் தென் கொரிய அதிபர் பார்க் ஜியுன் ஹை, வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் ஆகிய இருவரும் தீவிரம் காட்டிவருகின்றனர். 1950-53 போரின்போது லட்சக்கணக்கான கொரியர்கள் குடும்பங்கள் சிதறி பலர் பிரிய நேர்ந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x