Published : 27 Jan 2014 10:57 AM
Last Updated : 27 Jan 2014 10:57 AM
சீனா, தாய்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் 65-வது இந்தியக் குடியரசு தினம் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. சீனாவில் உள்ள இந்தியத் தூதரகத்தில், சீனாவுக்கான இந்தியத் தூதர் அசோக் கே காந்தா இந்திய தேசியக் கொடியை ஏற்றி, குடியரசுத் தலை வர் பிரணாப் முகர்ஜியின் உரையை வாசித்தார்.
அப்போது அவர், “சீனாவுடன் உள்ள தீர்க்கப்படாத பிரச்னைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் தீர்வு காணப்படும். சீனாவுடன் பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படும் தன்மை மேம்படுத்தப்படும்” என்றார்.
தொடர்ந்து நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சிகளி்ல், சீன மாணவர்களும் இணைந்து பங்கேற்றனர்.
குவாங்சௌ நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய தூதரக அதிகாரி கே.நாகராஜ் நாயுடு கொடியேற்றி வைத்தார். நாகராஜ் வீட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அப்பகுதியில் வசித்து வரும் ஏராளமான இந்தியர்கள் பங்கேற்றனர்.
தாய்லாந்தில், உள்ள இந்தியத் தூதரகத்தில் இந்திய தூதர் ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்கலா தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தேசிய கீதம், தேசியப் பாடல்களை அங்குள்ள இந்திய மாணவிகள் உள்ளிட்ட இந்தியர்கள் பாடினர். சியான் அமைப்பு நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்கள், தூதர்கள் தேசியக் கொடியேற்றி குடியரசு தினத்தைக் கொண்டாடினர்.
சிங்கப்பூரில் உள்ள துணைத் தூதரகத்தில், தூதர் விஜய் தாகுர் சிங் கொடியேற்றினார். இக்கொண்டாட்டத்தில் ஆயிரக்கணக்கான இந்தி யர்கள் பங்கேற்றனர். சிங்கப்பூரில் பயிலும் இந்திய மாணவர்கள், இந்திய தேசிய கீதத்தையும், தேசப்பற்று பாடல் களையும் பாடினர்.
ஜான் கெர்ரி வாழ்த்து
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளான அமெரிக்காவும், இந்தியாவும் இணைந்து செயல்படுவதன் மூலம் இருநாடுகளைச் சேர்ந்த மக்கள் பெரிதும் பயனடைவார்கள் என்று கடந்த வாரம் ஸ்விட்சர்லாந்தில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தை சந்தித்தபோது தெரிவித்தேன். உயர் நிலை அளவில் பேச்சுவார்த்தைக் கூட்டங்களை நடத்தி இருதரப்பு உறவுகளை மேம்படுத்த தொடர்ந்து முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று சல்மான் குர்ஷித் என்னிடம் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் ஒபாமா சார்பில் இந்தியாவுக்கு குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அமெரிக்காவும், இந்தியாவும் பல்வேறு மாற்றங்களை சந்தித்து வரும் நிலையில், இருநாடுகளின் மக்களையும் உயரிய ஜனநாயக பாரம்பரியம்தான் ஒன்றிணைக்கிறது. 20-ம் நூற்றாண்டில் ஜனநாயகத்துடன் கூடிய சுதந்திரம் என்ற மிகப்பெரிய மாற்றத்தை இந்தியா சந்தித்தது. இன்றைய உலகில் மேலும் பல புதிய ஜனநாயக நாடுகளுக்கு இந்தியா முன்னுதாரணமாக உள்ளது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT