Published : 28 Jan 2014 11:33 AM
Last Updated : 28 Jan 2014 11:33 AM
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த “டாப்ட் பங்க்” இசைக் குழு ஐந்து கிராமி விருதுகளை அள்ளிக் குவித்தது.
அமெரிக்காவைச் சேர்ந்த தேசிய ஒலிபிடிப்பு கலைகள், அறிவியல் அகடமி சார்பில் ஆண்டுதோறும் இசைத் துறையில் சிறந்து விளங்குவோருக்கு கிராமி விருதுகள் வழங்கப்படுகின்றன. 1959 முதல் கிராமி விருது விழா நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் கிராமபோன் விருதுகள் என்றழைக்கப்பட்ட இந்த விருது பின்னர் கிராமி விருதாக மாறியது.
முகமூடிகள்
56-வது கிராமி விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டாப்ட் பங்க் என்ற இருவர் இசைக்குழு 5 விருதுகளை அள்ளியது. மானுவல் டி ஹோமெம் கிறிஸ்டோ, தாமஸ் பேங்கால்டர் ஆகியோர் அடங்கிய அந்தக் குழுவினர் எப்போதும் ஹெல் மெட் அணிந்தே காணப்படுவர்.
பொது இடங்களில் இது வரை அவர்கள் முகத்தை வெளிகாட்டியதில்லை. கிராமி விருது விழாவிலும் அவர்கள் ஹெல்மெட்டுடன் கலந்து கொண்டனர். அவர்களின் “கெட் லக்கி”, “ரேண்டம் அக்சஸ் மெமரிஸ்” ஆகிய இசை ஆல்பங்கள் விருது களை அள்ளிக் குவித்தன. சிறந்த ஆல்பம் உள்ளிட்ட பிரிவுகளில் அவர்கள் 5 விருதுகளை வென்றனர். மேடையில் விருதுகளை வாங்கிய கையோடு ரசிகர்களுக்காக அவர்கள் இன்னிசை விருந்தும் படைத்தனர்.
மேக்கல்மோர், ரயான் லெவிஸ் ராப் ஆகிய இசைக் கலைஞர்களின் “சேம் லவ்”, “தி ஹிஸ்ட்”, “திரிப்ட் ஷாப்” இசை ஆல்பங்கள் 4 விருதுகளைப் பெற்றன. நியூசிலாந்தை சேர்ந்த பாப் இசைப் பாடகி லார்டியின் (17) “ராயல்ஸ்” இசை ஆல்பம் இந்த ஆண்டின் சிறந்த பாடல், சிறந்த தனிநபர் பாடல் ஆகிய பிரிவுகளில் 2 விருதுகளைப் பெற்றது. விழாவில் புகழ்பெற்ற பாப் இசை பாடகிகள் மடோனா, பியான்ஸ் உள்ளிட்டோரின் இசை நிகழ்ச்சிகளும் அரங்கேறின.
விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான்
மறைந்த இந்திய சிதார் இசைக் கலைஞர் பண்டிட் ரவி சங்கரின் “தி லிவிங் ரூம் செஷன்ஸ் பார்ட் 2” இசை ஆல்பமும் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த ஆல்பம் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை. விழாவில் இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானும் கலந்து கொண்டார். கடந்த 2010-ம் ஆண்டு கிராமி விருது விழாவில் அவர் இரண்டு விருதுகளை வென்றது நினைவுகூரத்தக்கது. இசைக் கலைஞர்கள் மட்டுமன்றி ஹாலிவுட் நடிகர், நடிகைகள் பலரும் விழாவில் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT