Published : 15 Dec 2013 04:10 PM
Last Updated : 15 Dec 2013 04:10 PM

நெல்சன் மண்டேலா உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபரும், நிறவெறிக்கு எதிராகப் போராடிய தலைவருமான நெல்சன் மண்டேலாவின் உடல் அவரது சொந்த கிராமமான குனுவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகலில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

வயது முதுமையால் ஏற்பட்ட தளர்ச்சி மற்றும் உடலநலக்குறைவால் அவதிப்பட்டு வந்த மண்டேலா (95) கடந்த 5-ம் தேதி ஜோகன்னஸ்பர்க்கில் காலமானார். 10 நாள்களாக துக்கம் கடைபிடிக்கப்பட்டு இன்று இறுதிச்சடங்கு நடைபெற்றது.

அந்த நிகழ்ச்சி தனிப்பட்டது என்பதால் அதில் மண்டேலாவின் மனைவி கிரகா மஷேல், முன்னாள் மனைவி வின்னி மடிகிசேலா மண்டேலா உள்ளிட்ட 450 பேர் பங்கேற்றனர்.

அரசு சார்பிலான இறுதிச்சடங்கு ஏற்பாடு இந்திய நேரப்படி காலை 11.30 மணிக்கு தொடங்கியது. அவரது வயதை பிரதிபலிக்கும் வகையில் 95 மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டன. அப்போது நடைபெற்ற 2 மணி நேர பொதுச்சடங்கில் அழைப்பின்பேரில் முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன், இளவரசர் சார்லஸ், ஈரான் துணை அதிபர், பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளின் அதிபர்கள் உள்ளிட்ட 4500 விருந்தினர்கள் வந்திருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேகப் ஜூமா, 95 ஆண்டுக்கு முன் தொடங்கிய இவரது தனித்துவமிக்க பயணம் இன்றுடன் முடிகிறது என வர்ணித்தார்.

மண்டேலாவின் நீண்ட கால நண்பரான ஆர்ச்பிஷப் டெஸ்மாண்ட் டுட்டுவும் இறுதிச் சடங்கைக்காண வந்திருந்தார். முன்னதாக, மண்டேலா உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டி அவரது வீட்டிலிருந்து பிரத்தியேகமாக அமைக்கப்பட்டிருந்த வெண்மை நிற குடிலுக்கு, ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் கொண்டு செல்லப்பட்டதுடன் இறுதிச் சடங்கு தொடங்கியது.

தெம்பு இனத்தவரைச் சேர்ந்தவர் என்பதால் அவர்களது குலவழக்கப்படி இறுதிச்சடங்கு நடைபெற்றது. மண்டேலா சாதனைகள், அவரது வாழ்வில் நடந்த முக்கிய சம்பவங்களை நினைவு கூரும் பாடல்களை அவர்கள் பாடி அஞ்சலி செலுத்தினர். இறுதிச்சடங்கின்போது குல மரபுப்படி எருமை பலி கொடுக்கப்பட்டது.

மண்டேலாவின் உடல் இறுதிச் சடங்குக்காக, அவரது சொந்த கிராமமான குனுவுக்கு பிரிட்டோரியாவில் உள்ள வாட்டர்குளூப் தளத்திலிருந்து விமானப்படை விமானத்தில் சனிக்கிழமை கொண்டு வரப்பட்டது. விமானம் எம்ததா நகரத்தில் தரையிறங்கியதும் அங்கிருந்து 31 கி.மீ. தொலைவில் உள்ள குனு கிராமத்துக்குச் கொண்டுவரப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x