Published : 25 Nov 2013 12:00 AM
Last Updated : 25 Nov 2013 12:00 AM
தென் சீனக் கடல் பகுதியில் சர்ச்சைக்குரிய தீவுகளை உள்ளடக்கி, சீனா தன்னிச்சையாக வான் பாதுகாப்பு மண்டலம் அறிவித்ததை தொடர்ந்து அப்பகுதி யில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந் நிலையில், ஜப்பானை பாதுகாக்க அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி கூறி யுள்ளார்.
தென் சீனக் கடல் பகுதியில் சென்காகு தீவுகள் ஜப்பான் கட்டுப்பாட்டில் இருந்து வரு கின்றன. இத்தீவுகளை டையா வோயு தீவுகள் என்ற பெயரில் அழைக்கும் சீனா, அவற்றை தனக்கு சொந்தம் என்று கூறி வருகிறது. இதனால் இத்தீவுகள் சர்ச்சைக்குரிய பகுதியாக இருந்து வருகிறது.
இந்நிலையில் இத்தீவுப் பகுதியை உள்ளடக்கி புதிய வான் பாதுகாப்பு மண்டலத்தை சீனா தன்னிச்சையாக நேற்று முன்தினம் அறிவித்தது. இப்பகுதிக்குள் நுழையும் விமானங்கள் முன்கூட்டியே சீன வெளியுறவு அமைச்சகம் அல்லது சீன விமானப் போக்குவரத்து துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவிக்காவிடில், அந்த விமானங்கள் தற்காப்பு கருதி சீனா மேற்கொள்ளும் தாக்குதலுக்கு உள்ளாக நேரிடும் என்றும் சீனா எச்சரித்தது. எனினும் புதிய வான் பாதுகாப்பு மண்டலத்தில் சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு எந்த தடையும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டது.
சீனாவின் இந்த அறிவிப்பால் தென் சீனக் கடல் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி ஜெனீவா நகரில் நேற்று முன்தினம் கூறியதாவது: தென் சீனக் கடல் பகுதியில் தற்போது நடைமுறையில் உள்ள நிலையை மாற்றும் முயற்சியாகவே இந்த தன்னிச்சையான நடவடிக்கை அமைந்துள்ளது. இந்த
விஸ்தரிப்பு நடவடிக்கையால் அப்பகுதியில் பதற்றமும் அசம்பாவித சம்பவத்துக்கான வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. எனவே சீனா தனது அறிவிப்பை நடைமுறைப்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். சீனாவின் தன்னிச்சையான முடிவு குறித்து அமெரிக்கா தீவிரமாக ஆராய்ந்து வருவதுடன், தனது நெருங்கிய நட்பு நாடான ஜப்பானை பாதுகாக்க உறுதிபூண்டுள்ளது. இவ்வாறு ஜான் கெர்ரி கூறினார்.
சீனாவின் இந்த நடவடிக்கை மிகவும் ஆபத்தானது என்று ஜப்பான் கூறியுள்ள நிலையில், ஜான் கெர்ரி மட்டுமன்றி பிரிட்டன் வெளியுறவுத் துறை செயலாளர் சக் ஹேகலும் “சீனா கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ளவேண்டும் ஜப்பானால் நிர்வகிக்கப்படும் சென்காகு தீவுகள் ஜப்பான் – அமெரிக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ் உள்ளது. அப்பகுதி தாக்கப்பட்டால் அமெரிக்கா தனது நட்பு நாடான ஜப்பானை பாதுகாக்கும்” என்று கூறியுள்ளார்.- பி.டி.ஐ.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT