Published : 20 Feb 2014 12:01 PM
Last Updated : 20 Feb 2014 12:01 PM

சீன ராணுவ வீரர்களின் எடை, உயரம் அதிகரிப்பு: ஆயுதங்கள் பயன்படுத்துவதில் சிக்கல்

உலகின் மிகப்பெரிய ராணுவத்தைக் கொண்டுள்ள சீனாவுக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முந்தைய சீன ராணுவ வீரர்களின் உடலமைப்புக்கு ஏற்றவகையில் தயாரிக்கப்பட்ட ராணுவ ஆயுதங்களும் தளவாடங்களும் தற்போதைய வீரர்களுக்கு ஏற்றதாக இல்லை. சீன ராணுவ வீரர்களின் எடை மற்றும் உயரம் அதிகரித்து விட்டதால் அவர்கள் ராணுவத் தளவாடங்களைப் பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மக்கள் விடுதலை ராணுவத்தின் பொது ஆயுதப்பிரிவுடன் இணைந்து ஆய்வு நிறுவனமொன்று மேற்கொண்ட ஆய்வில் இது குறித்த தகவல்கள் தெரியவந்தன. ராணுவத்தில் பணியாற்றும் வெவ்வேறு வயதுடைய 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில், கடந்த 20 ஆண்டுகளுக்கு முந்தைய சீன ராணுவ வீரர்களை விட தற்போதைய வீரர்கள் 2 செ.மீ. உயரம் அதிகரித்துள்ளனர், அவர்களின் இடுப்பளவும் 5 செ.மீ. அதிகரித்துள்ளது. உடலமைப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால், அவர்களின் உபகரணங்களிலும் உடனடியாக மாற்றம் கொண்டுவர வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

வழக்கமாகப் பயன்படுத்தும் ராணுவ டாங்கிகளைப் பயன்படுத்தும் சீன வீரர் அது அசெௌகரியமாக இருப்பதாக உணர்கிறார். கடந்த 30 ஆண்டுகளுக்கு முந்தைய ராணுவ வீரர்களின் சராசரி உடலமைப்புக்கு ஏற்றவகையில் அந்த உபகரணங்கள் இருப்பதே அதற்குக் காரணம்.

சுடும் இயந்திரங்களில் உள்ள இருக்கைகள், சீன ராணுவ வீரரின் பின்புறத்தை விட சிறியதாக இருப்பதால், சுடும் துல்லியத்தன்மையில் பாதிப்பு ஏற்படுகிறது. ஆகவே, மிக எளிமையாகக் கையாளும் நிலையிலான தளவாடங்கள் அவர்களுக்குத் தேவைப்படுகின்றன என இந்த ஆய்வுக் குழுவின் இயக்குநர் டிங் சாங்டாவோ தெரிவித்துள்ளார்.

சராசரி மனித உடலின் 28 அளவீடுகளை ஒப்பிட்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வு, புதிய ஆயுதங்களை வடிவமைப்பதற்கு உதவிகரமாக இருக்கும் என டிங் சாங்டாவோ தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x